களுவாஞ்சிகுடி: ஜனாதிபதி மஹிந்தவின் இரானுவ ஆட்சியில் வட மாகாணத் தேர்தலில் த.தே.கூ சரித்திரம் காணாத வரலாற்று வெற்றியை அடையவுள்ளது என த.தே.சு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
சிலைஉடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைதுசெய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அது முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி இந்த நாட்டில் யுத்தம் முடிவு என்ற போர்வையில் ஒரு இனத்தை முழுமையாக அழித்து இந்த நாட்டில் சிவில் நிர்வாகம் என்ற ஒன்றை இந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அறிமுகம் செய்தது.
இந்த நாட்டில் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வட கிழக்கில் இரு ஆட்சிகள் நிலவின.ஒரு பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளிடத்திலும் அடுத்த பகுதி இலங்கை இரானுவத்தினரிடமும் காணப்பட்டது.பின்னர் தனியான சிவில் நிர்வாகம் என்று ஒன்று உருவாக்கப்பட்டு சமாதானம் சகவாழ்வு நிலவுவதாகவும் இந்த அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், எமது மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரு முக்கிய கோயில்களில் சிலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூரையாப்பட்டமை தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் அவர்களை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழர்களின் மத சுதந்திரத்தை பாதுகாத்துத் தருமாரு கோரியும் கவனஈர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்து முறையாக பொலிஸாரிடம் அனுமதியைப் பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு மட்டு மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்க இருந்தோம்.
ஆனால், இன்று காலை 08.00மணிக்கு குறித்த இடத்திற்கு வந்து பார்த்த போது மக்கள் காணப்படவில்லை. விசாரித்துப் பார்த்த போது நேற்று இரவு குறித்த பிரதேசங்களிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் இரானுவப் படையினர் சென்று குறித்த பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது.அதற்கு ஆலய ஒலிபெருக்கியை உபயோகிக்கக் கூடாது என அச்சுறுத்தியுள்ளதாக கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தோம்.
இன்றும் நாங்கள் அடக்கு முறையின் கீ;ழ் இரானுவ ஆட்சியிலேதான் வாழ்கிறோம். ஜனநாயக நாடு மார்பு தட்டிக் கொள்ளும் நாட்டில் ஜனநாயக நடை முறை மீறப்படுவதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இதை நன்றாக சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு தூதுவரும் வந்து இங்கு சமாதானம் சகவாழ்வும் நிறைந்து வழிகிறது என நினைத்து விடக் கூடாது.
நாங்கள் ஜனாதிபதி மஹிந்தவின் இரானுவ ஆட்சியிலே வாழ்கிறோம்.விடுதலைப் புலிகள் அரசாங்கம் என இரு ஆட்சிகள் நிலவியதைப் போல இன்று இரானுவம்,பொலிஸார் என இரு ஆட்சிகள் இடம்பெறுகின்றன. நாங்கள் எங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கச் சொல்லவில்லை.கடவுளுக்கு பாதுகாப்புக் கொடுங்கள்.
இந்தத் தேர்தலில் வட மாகாணத்தில் சரித்திரம் காணாத வரலாற்று வெற்றியை அடையவுள்ளோம். அதற்கும் இந்த பாதுகாப்புப் படையினர் தடையாக உள்ளனர். தமிழர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் பாதுகாப்புக் கேட்கும் சமாதான காலம் இதுவாகும். தொடர்ந்தும் இந்த நிலைமை காணப்படும் பட்சத்தில் எமது மக்களை உரிமைகளை வென்றெடுக்க போராட களமிறக்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment