திருகோணமலை: திருமலை மாவட்டத்தில் புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக்குடா, தேத்தாவடித்தீவு, வீரந்தீவு, மன்கிரிமலை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் முஸ்லிம் மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு படையினரும், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குமார்களும் தடைசெய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த யூலை மாதம் 23 ஆந் திகதி இடம்பெற்ற மாகாணசபை அமர்வை இடையில் ஒத்தி வைத்துவிட்டு விசேடமாக புல்மோட்டை முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் மாகாண அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், குச்சவெளி பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சென்ற 2013.08.01 ஆந் திகதி காலை 10.00 மணியளவில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் இது தொடர்பான கூட்டம் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீரதிஸாநாயக்க, வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதிகலபதி, திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபிக், மாகாண சபை உறுப்பினர்களான அன்வர், பிரியந்த பத்திரன, மாகாண காணி ஆணையாளர், புவிசரிதவியல் உதவி ஆணையாளர், மாகாண புவிசரிதவியல் திணைக்களப்பணிப்பாளர், வனவிலங்கு உயர் அதிகாரிகள,; திணைக்களத் தலைவர்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புல்மோட்டை முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நேரம் இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான விடயங்களை அதிகாரிகளுக்கு விளங்கப்படுத்தி நீண்ட நேரம் காணி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டு நல்ல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதே வேளை கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான விடயங்கள் எழுகின்ற போது மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் கலந்து கொண்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் எந்தக்காரணம் கொண்டும் மதத்தலைவர்கள் காணிகள் சம்மந்தமான விடயத்தில் தலையிடக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைசசர் உதுமாலெப்பை அவர்கள் கிழக்கு மாகாணத்தில் பிரச்சனைகள் தொடர்பான விடயத்தில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதகுருக்கள் தலையிட அனுமதித்தால் முஸ்லிம் மக்கள் சார்பில் உலமாக்களும், இந்து மக்கள் சார்பில் குருக்களும், கிறிஸ்தவ மக்கள் சார்பில் பாதிரிமார்களும் காணி விடயத்தில் தலையிடுவார்கள். காணி அமைச்சர், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் காணி சம்மந்தமான விடயங்களுக்கு தீர்வுகாண வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இவ்வேளையில் குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் பிரியந்தபத்திரன ஆத்திரப்பட்டவராக தனது கையில் இருந்த கையடக்க தொலைபேசியில் இருந்த புகைப்படத்தினைக் காட்டி முஸ்லிம்கள் சிங்கள விகாரை ஒன்றினை தாக்கிய படம் தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ளதாக காட்ட முனைந்தார்.
அவ்வேளையில் குறுக்கிட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரியந்தபத்திரனயை நோக்கி உங்களிடம் உள்ள கையடக்க தொலைபேசியில் உள்ள படம் முஸ்லிம்கள் பன்சலையை உடைத்த படம் எனக் கூறுகின்றீர்கள். இப்படி கூறுவது தவறான கருத்து ஆகும். இவ்வாறான பொய்யான தகவல்களை கூறி இனவாதத்தை விதைக்கின்றீர்கள். அன்மையில் புனித றமழான் மாதம் என்று பாராமல் முஸ்லிம்களின் மஹியங்கனைப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதும், பன்றி இறைச்சி வீசப்பட்ட படமும், தம்புள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்ட படமும் எங்களிடம் உள்ளது. எனவே, இனவாத கருத்துக்கள் யார் பேசினாலும் அதற்கு நாம் வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்போம்.
கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆண்டுகாலமாக மூவின மக்கள் மத்தியிலும் உண்மைக்கு உண்மையாக இன ஐக்கியத்தை ஏற்படுத்தி வருகின்றோம். தியாகமனமாக செயற்படும் எங்களுக்கு இவ்வாறான இனவாத கருத்துக்களை ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் கூறிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.
கிழக்கு மாகாண கல்வி காணி அமைச்சர் விமலவீரதிஸாநாயக்க பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் கடந்த ஐந்து வருட காலமாக இன பேதமின்றி சகல மக்களின் காணிப் பிரச்சனைகளுக்கு அவரால் முடிந்தளவு தீர்வு கண்டு வந்துள்ளார். எனவே, கிழக்கு மாகாணத்தில் எல்லா சமூகங்களும் யுத்தத்தினால் பாதி;க்கப்பட்டுள்ளோம். சகல மக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதுடன் தங்கள் தங்கள் வரலாற்றுக்காணிகளை இழந்த நிலையில் உள்ளனர். எனவே, இதனை ஒரு இனவாத நோக்குடன் பார்க்காது யதார்த்தமான முறையில் தீர்வுகான வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்;.

Leave a comment