கொழும்பு: கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் உரையாற்றுகையில் தமிழ்ப் பெண்களை தரம் தாழ்த்திப் பேசியதாக சில பத்திரிகைகள் செய்தியை வெளியிட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தம்பி குகவரதன் அவசரப்பட்டு அறிக்கை மூலமாக என்மீது அவதூறு செய்ய முற்பட்டுள்ளார். அதற்காக அவர் மீது நான் கோபப்படவில்லை.
மாறாக அனுதாபப்படுகிறேன். அவரது அறியாமை குறித்துக் கவலைப்படுகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
தம்பி குகவரதன் பிறப்பதற்கு முன்னரிருந்தே தமிழைப் பேணி வருவதுடன் பாராளுமன்றத்தில் திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை உதாரணம் காட்டி பேசி வருபவன் நான் இளம் அரசியல்வாதியாக இருந்தும் இவற்றை அறியாத அவர் வார்த்தைகளை எழுத்தில் விட்டமைக்காக வருத்தப்படுவதற்கு மாறாக அவர் மீது அனுதாபமே கொண்டுள்ளேன். அவர் இனிமேலாவது நல்லதைப் பேசி, நல்லதைச் சொல்லி தன் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு பசளை போட்டுக்கொள்ளட்டும் எனவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய விடயத்தை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றும் உரைகளைப் பதிவுசெய்யும் ஹன்சாட் எனும் பதிவேடு இவ்வாறுதான் பதிவு செய்துள்ளது.
தமிழ்ப் பெண்கள் பூவும் பொட்டும் வைத்து அழகாக உடையணிந்து வீதியிலே செல்கின்ற காட்சியை நாங்கள் இந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியல்தான் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கின்றது. உங்களால் பார்க்க முடியாவிட்டால் கண்களைப் பொத்திக்கொள்ளுங்கள். அழகான பெண்மணிகள்! அன்று அவ்வாறு அவர்களால் போக முடியவில்லை நடமாட முடியவில்லை; பயத்தால் – பீதியால் அவர்கள் நடுநடுங்கினார்கள். அப்படியான நிலைமையை இல்லாமல் செய்தது யார்? அதனை நாங்கள் முதலில் அறிய வேண்டும். (வி)
எந்தவொரு இடத்திலும் நான் ஒய்யாரமாக நடக்கிறார்கள் என்றோ அல்லது பத்திரிகைகள் சிலவற்றில் குறிப்பிட்டது போன்று தரக்குறைவாகவோ பேசவில்லை என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார். தன்னுடன் நல்லுறவைப் பேணி வரும் தமிழ்ப் பத்திரிகைகள் சில ஏன் இவ்வாறு நடந்து கொண்டன எனத்தான் இன்னமும் ஆச்சரியத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
– தினகரன்
Leave a comment