சென்னை: திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.
இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் ஏற்கனவே கூறி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி….
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 6 பெரிய மாநிலங்களும், 6 சிறிய மாநிலங்களும்தான் இருந்தன. சுதந்திரம் அடைந்த பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்தியா வளர்ச்சிக்காண வேண்டுமானால் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பெரிய மாநிலங்கள் இரண்டு மூன்றுகளாக பிரிக்கப்பட்டன. அதன்பிறகு மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில்தான் சென்னை மாகாணம் கர்நாடக, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு என்று நான்கு மாநிலங்களாக உருவானது. இப்படி பிரிக்கப்படவில்லையென்றால் இன்றைக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்காது.
அதேபோன்றுதான் தமிழகத்தில் ஆரம்பத்தில் 13 மாவட்டங்கள் தான் இருந்தன. நிர்வாக வசதிக்காக இன்றைக்கு 32 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும், வளர்ச்சி, மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட்டவை.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களாக இருப்பவை உத்திரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு தான். ஆந்திரா இப்பொழுது பிரிக்கப்பட்ட பிறகு இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடாகும். மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சமாகும், 234 சட்டமன்ற தொகுதிகள் 39 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது
உத்திரப் பிரதேசத்திலிருந்து பார்த்தால் எல்லா வகையிலும் இப்பொழுது தமிழ்நாடுதான் பெரிய மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது
மராட்டிய மாநிலத்தை இரண்டாக பிரித்து ‘விதர்பா’ மாநிலமும், மேற்கு வங்காளத்தை பிரித்து ‘கூர்காலாந்து’ என்றும், உத்திரப்பிரதேசத்தை பிரித்து ‘ஹரித் பிரதேசம்’ என்றும் மாநிலங்களை பிரிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
உத்திரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக கூட பிரிக்கலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பிரித்து ‘குடகு’ மாநிலம் அமைக்க வேண்டும் என்றும் முன்பு கோரிக்கைகள் எழுந்தன.
இவைகளை ஒப்பிடும்பொழுது நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
மூன்றாக கூட பிரித்தால் என்ன? என்று தமிழக மக்களே ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்.
தமிழகத்திற்கு சென்னை தலைநகரமாக இருப்பதால் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொழில், வேலைவாய்ப்பை முன்னிட்டு வடதமிழகத்தில் நெருக்கமாக வந்து குடியேறி விட்டார்கள். இதனால் சுற்றுசூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறி விவசாயம் அடியோடு பாதிப்பு, இடநெருக்கடி, நிர்வாக திறன், நேரமின்மை, குறிப்பாக ஒருபக்கம் வளர்ச்சி, ஒருபக்கம் தொய்வு என்ற நிலை உருவாகியுள்ளது.
வட தமிழகத்தில் மக்கள் பெருக்கத்தால் சட்டமன்ற தொகுதிகள் தென்மாவட்டங்களில் குறைந்து வடதமிழகத்தில் கூடுதலாக தொகுதிகள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லபோனால் போக்குவரத்து, காலவிரயத்தை கருத்தில் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் தொடங்கப்பட்டது.
இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சீரான வளர்ச்சி காணவும் சிறிய மாநிலம் சிறந்த நிர்வாகம் என்கிற அடிப்படையில் திருச்சி காவேரிக்கரையை மையமாக வைத்து தமிழகத்தை இரண்டாக பிரித்து சென்னையை தலைநகரமாக கொண்டு ‘வடதமிழகம்’ என்றும், மதுரையை தலைநகரமாக கொண்டு ‘தென்தமிழகம்’ அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசினுடைய நிதி ஆதாரங்கள் கூடுதலாக கிடைப்பதோடு, திட்டங்களும் அதிகளவில் வரும். இதன் மூலம் தமிழக மக்கள் பயனடைவார்கள்.
இதே கோரிக்கையை முன்பு மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் சேதுராமன், இறைவன் போன்றவர்கள் வைத்தனர். குறிப்பாக தென்மாநில மக்கள் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு இயற்கையாகவே எல்லைக்கோடாக திருச்சி காவிரிக்கரை அமைந்துள்ளது எனவே எந்த பாகுப்பாடும் இன்றி இரண்டாக பிரிக்கலாம். தமிழகத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ‘மாநிலப்பிரிவு மக்கள் இயக்கம்’ ஒன்றை நடத்தவுள்ளோம். முதலில் கையெழுத்து இயக்கம், இது சம்பந்தமாக டெல்லிக்கு குழுவாக சென்று சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம் என்றார் அவர்.

Leave a comment