எமது வேண்டுகோளும் மின்சார சபையின் உடனடி நடவடிக்கையும்..

IMG_0972[1]காத்தான்குடி: கடந்த 29-07-2013 அன்று எமது இணையத்தளத்தில் வெளியான ‘இரவு நேர தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதி…’ எனும் தலைப்பிடப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, இரு நாட்களுக்குள் காத்தான்குடி மின்சார சபையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தற்பொழுது மக்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

பிரதான வீதியின் மின்விளக்குகள் எரிவதை வைத்து, முழு ஊருமே வெளிச்சத்தில் இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதே போல் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாலும், இருள் சூழ்ந்த இரவுப் பொழுதையும், நடந்து செல்வோரின் சிரமங்களையும் அதிகமான மக்கள் தற்பொழுது மறந்து விடுகின்றனர்.

குறிப்பாக பெண்கள், வயோதிபர்களின் போக்குவரத்து நிலையை மக்கள் அறிந்து கொள்வதற்குக்கூட நேரமில்லாத நிலையிலும் பலர் இருந்து வருகின்றனர்.

புனித ரமழானின் கடைசிப்பத்தின் அரைவாசி சென்று கொண்டிருக்கும் இந்நிலையில் குறிப்பாக முதியோர்களும், பெண்களும் தறாவீஹ் தொழுகைக்காக நடந்தே பயணிக்கின்றனர். தற்பொழுது பள்ளிவாயல்களில் பெண்களுக்கான இரவுத் தொழுகை ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதால் தாய்மார்களும் சகோதரிகளும் இருள்சூழ்ந்த இரவில் அச்சத்துடன் பள்ளவாயலுக்குச் சென்று வந்தனர்.

தற்பொழுது உள்ளக வீதிகளில் காத்தான்குடி மின்சார சபையினரின் உடனடி நடவடிக்கையை அடுத்து, ஒளிராமல் பல நாட்களாக இருந்த மின்குமிழ்களை அகற்றி புதிய மின்விளக்குகளைப் பொருத்தி வருவதுடன், பழுதடைந்திருந்த இணைப்புக்களை மீண்டும் சரிப்படுத்தி மின்விளக்குகளை ஒளிரச் செய்து வருவதைக் காண முடிகிறது.

மக்களின் தேவையே எமது குறிக்கோள். எமது செய்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக உரிய நடவக்கைகளை மேற்கொண்டுவரும் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி உத்தியோகத்தர்களுக்கு எமது ஊர் மக்கள் சார்பாக இந்நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

– உங்கள் காத்தான்குடி

Published by

Leave a comment