கொழும்பு: இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் இளைஞர் பேரவையில் (Youth Forum) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 138 இளைஞர், யுவதிகள் பங்குபற்றவிருப்பதாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.
பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 54 நாடுகளிலிருந்தும் தலா இருவர் வீதமும் இலங்கையைச் சேர்ந்த மேலும் 30 இளைஞர் யுவதிகளும் இப் பேரவையில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டினை யொத்ததாக நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இளைஞர் பேரவை நடத்தப்படவுள்ளது.
இளைஞர் பேரவையில் கலந்துகொள் வோருக்கு மேலதிகமாக இலங்கையர்கள் 20 பேர் உள்ளிட்ட 70 இளைஞர், யுவதிகள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்பேரவை தொடர்பிலான செயற் பாடுகளை முன்னெடுப்பதற்கென 10 பேர் கொண்ட இளைஞர் செயலணி யொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த 05 இளைஞர்களும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 05 இளைஞர் களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வை தேசிய மட்டத்தில் முன்னெடுப்பதற்கான பிரதான குழுவொன்று இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இயங்கி வருகின்றது.
தேசிய மட்ட குழுவின் வேலைகளை இலகுபடுத்தும் நோக்கில் மேலும் 14 உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் சபையும் இலண்டனிலுள்ள பொதுநலவாய இளைஞர் விவகார செயலகம் மற்றும் பொதுநலவாய இளை ஞர் கவுன்சில் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் இளைஞர் பேரவையை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதன்படி, பொதுநலவாய இளைஞர் கவுன்சிலின் பிரதான கூட்டம் இலங்கை யிலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவும் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த ஆயிரம் இளைஞர் யுவதிகளை கலந்துகொள்ளச் செய்வதற்காக செயலாளர் பிரிவுகள் தோறும் இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மேலும் ஹம்பாந்தோட்டையில் கஷ்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இளைஞர் பேரவையில் கலந்துகொள் வதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடு களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக ஹம்பாந்தோட்டையில் 92 ஹோட்டல் அறைகளும் கதிர்காமத்தில் 50 ஹோட்டல் அறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இளைஞர் பேரவையில் கலந்துகொள்வோர் கதிர்காமம், யால மற்றும் உடவளவை ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
– தினகரன்
Leave a comment