இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் அந்நாட்டின் தாலிபான்கள் திட்டமிட்டு ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியதில் அச்சிறையில் இருந்தவர்கள் சுமார் 250 பேர் தப்பித்துள்ளனர். தப்பித்தவர்களில் சுமார் முப்பது பேர் கடும்போக்கு ஆயுததாரிகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தேரா இஸ்மாயில் கான் என்ற ஊரில் உள்ள இந்த சிறைக்கு நள்ளிரவு சமயத்தில் பெரும்பெரும் ஆயுதங்களை ஏந்தியபடி டிரக் வண்டிகளில் கிளர்ச்சிக்காரர்கள் வந்து குவிந்தனர். மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு சிறைக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
பொலிஸ் தரப்பில் ஆறு பேரும், ஆயுததாரிகள் தரப்பில் குறைந்தது ஆறு பேரும் மோதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படியான ஒரு தாக்குதல் நடத்தப்படுமென்ற உளவுத் தகவல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் பெறப்பட்டிருந்தது.
ஆனாலும் இவ்வளவு விரைவில் தாக்குதல் வரும் என்று தாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
– BBc

Leave a comment