– தொகுப்பு: பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோயில்குளம் கிராம சேவகர் பிரிவிட்குட்பட்ட மீள்குடியேற்ற ‘சிகரம்’ குக்கிராமத்தில் பல வருடங்களாக போதியளவு நிரந்தர இருப்பிடங்கள் இல்லாது மக்கள் அநாதரவற்ற நிலையில் சொல்லலுறா துன்பங்;களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல்லாண்டுகாலம் பழமை வாய்ந்த சிகரம் கிராமம் 1990ம் ஆண்டு காத்தான்குடிப் பள்ளிவாயலில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட கொடூர படுகொலைச் சம்பவ காலப்பகுதியில் வன்செயல் அச்சம் காரணமாக சொந்த வீடுகளை விட்டு விட்டு காத்தான்குடிக்கும் அதனை அண்டிய பாதுகாப்பான பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.
1990ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 35குடும்பங்கள் வசித்து வந்தனர்.கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக ஜனசக்தி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இவ்வாறான 35 ஜனசக்தி வீடுகள் இடம்பெயருகின்ற பொழுது முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு சிகரம் குக்கிராமத்திலிருந்த பள்ளிவாயல்கள் மற்றும் வீடுகள் என்பன தரைமட்டமாக்கப்பட்ட வண்ணம் காணப்பட்டன.
இடம்பெயர்ந்த இவர்களில் சிலர் அகதிமுகாம்களிலும் மேலும் சிலர் உறவினர்களின் வீட்டிலும் தஞ்சம் புகுந்திருந்தனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்த இவர்களை 2004ம் ஆண்டு அகோர சுனாமிப் பேரலைகள் தாக்கியது.இதில் சில உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் பலரின் உடமைகள் சேதமடைந்தன.
ஏலவே கொடூர யுத்தத்தினால் பாதிப்புற்று பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த இம்மக்களை சோதனைக்கு மேல் சோதனை என்ற தோரணையில் சுனாமியும் தாக்கி அவலங்களுக்கு மேல் அவலங்களாக கஸ்டத்திற்கு மேல் கஸ்டங்களை அந்தமக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
1978ம் ஆண்டு ஓலைக்குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சிகரம் பள்ளிவாசல் 1982ம் ஆண்டு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த காலப்பகுதியில் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த மர்ஹும் பரீட் மீரா லெப்பை மற்றும் ரி.எல். அகமட் லெவ்வை ஆசிரியர் (ரி.எல்.மாஸ்டர்) உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் கல்லினால் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த போது காத்தான்குடியில் இருந்த அமைப்புக்களுக்கோ அல்லது முக்கியஸ்தர்களுக்கோ பெரியளவு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை.
ஆனாலும் அவர்களால் முடிந்த உலருணவுப் பொதிகள் உள்ளிட்ட சிற்சில உதவிகளை வழங்கினர்.
1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த போது சிகரத்தில் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்தது.அதன்பின்னர்தான் இந்த கிராமத்தில் மெதடிஸ்த திருச்சபை,சிகரத்தை அண்டிய வடக்கு எல்லையில் ஒரு கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த நாங்கள் காத்தான்குடியில் கடல் கரையோரப்பிரதேசங்களில் வாழ்ந்ததனால் சுனாமியாக கடுமையாக பாதிக்கப்பட்டோம்.அதன் பிறகு அரசாங்கத்தால் கரையோரப்பகுதிகளில் குறிப்பிட்டளவு வசிக்க வேண்டாம் என அறிவித்ததனால் எங்களுக்கு இருந்த தற்காலிக இருப்பிடமும் கேள்விக்குறியானது.
இதன் பிற்பாடு 2005ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த ரஊப் ஹாஜியார் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஆகியவற்றின் முயற்சியினால் மீண்டும் சுமார் 08குடும்பங்கள் அளவில் இந்த கிராமத்திற்கு மீளக் குடியமர்ந்தோம்.
மீளக்குடியமர்ந்த போது சிகரம் குக்கிராமத்தில் மாற்றுமதத்தவர்களின் குடியேற்றம் காணப்பட்டது.அங்கிருந்தவர்கள் எங்களை நாங்கள் இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வந்ததைப் போன்று பார்த்தார்கள்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்களுக்கான நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை.
65 குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் வசித்து வரும் இக்கிராமத்தில் பெரும்பாலும் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந்த கிராமத்திற்கு பெரும் பெரும் தலைவர்கள்,வெளிநாட்டுத் தூதுவர்கள் வருகை தந்திருக்கின்றனர்.
ஆனாலும் எல்லோரும் இவர்களைப் பார்த்து அனுதாபப்பட்டு இதை விரைவில் செய்து தருகிறோம் எனக் கூறியுள்ளார்கள்.இதுவரையில் எந்தவொன்ரும் கிடைக்கவில்லை.
குறித்த கிராமத்திற்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு பிரித்தானியத் தூதுவர்,இந்தியத் தூதுவர்,ஈரான் தூதுவர் விஜயம் செய்து எமது நிலைமைகளை கேட்டறிந்து விரைவில் தாம் உங்களது தேவைகளை பூர்த்தி செய்து தருவோம் என்று கூறிச் சென்றனர்.
ஆனால் இதுவரையில் எவ்வித செயற்பாடும் இடம்பெறவில்லை.
இந்திய வீட்டுத்திட்டத்தில் எங்களது கிராமம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டோம்.ஆனால் நிறைய வீடமைப்புத் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது வரையில் எமக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த கிராமத்தின் தேவைகளை அரசியல்வாதிகள் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளனர்.
ஆனால் அரசாங்கத்தினால் இந்த கிராமத்திற்கு வெறுமனே 200மீற்றர் கொங்கிறீட் பாதையொன்று மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரம்தான் அரசாங்கத்தினால் இந்த குக்கிராமத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி என குறித்த சிகரம் குக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இக்கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து காத்தான்குடியில் வசித்து வந்த மக்கள் பின்னர் அங்கு சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீண்டும் இந்த சிகரம் கிராமத்திற்கு சென்று மீளக்குடியமர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த எட்டு வருடங்களாக குடிசைகளிலும் தற்காலிக வீடுகளிலுமே வசித்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை காலத்திலும் மற்றும் வெயில் காலத்திலும் நிரந்தமான வீட்டு வசதியில்லாததால் இந்த கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகுவதாக பலவருடங்களுக்கு மேல் ‘சிகரம்’ குக்கிராமத்தில் உள்ள முகைதீன் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.வை.ஆதம் தெரிவித்தார்.
குடிசையிலிருந்து ஓலைக்கொட்டில்கள் என பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த ‘சிகரம்’ குக்கிராமத்தில் உள்ள முகைதீன் பள்ளிவாயல் காத்தான்குடியிலுள்ள தனவந்தர்களாலும் நல்லெண்ணம் படைத்தவர்களாலும் ஓரளவு செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும் பள்ளிவாயல் போதியளவு வசதிகள் இல்லாததாக உள்ளது.
பள்ளிவாயலின் கூரைத்தகடுகள் இறந்து காணப்படுவதால் மழைகாலங்களில் பள்ளிவாயலுள்ளே நீர் வழிந்து காணப்படுகின்றது.
அது மாத்திரமல்லாமல் மேற்குறித்த பள்ளிவாயலுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜும்மாத் தொழுகைக்கு காத்தான்குடி,காங்கேயனோடை,பாமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து நிறைய சகோதரர்கள் வருகை தருகின்றனர்.இதற்கு போதியளவு வசதிகள் இல்லாமலுள்ளது.
குறித்த பள்ளிவாயல் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் பாதசாரிகள்,பிரயாணிகள் பள்ளிவாயலுக்கு வந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.அதற்கேற்பவும் போதியளவு வசதி இந்தப் பள்ளிவாயலில் இல்லாமலுள்ளது.
இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து பள்ளிவாயல் புனருத்தானம் செய்யப்பட வேண்டும் என சிகரம் குக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க குறித்த சிகரம் குக்கிராம மக்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள மாற்று மதத்தவர்களுடனும் இன நல்லுறவுடன் தமது செயற்பாடுகளை அமைத்து வருகின்றனர்.
சிகரம் முஸ்லிம் கிராமத்திற்கு கிடைக்கப்பெறும் உதவிகளில் சிலவற்றை சிகரம் பகுதியிலுள்ள மாற்று மதச் சகோததரர்களில் கஷ்டப்படும் குடும்பங்களிற்கும் வழங்கி வருவதாக ‘சிகரம்’ குக்கிராமத்தில் உள்ள முகைதீன் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.வை.ஆதம் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் ரமளான் காலங்களில் நோன்பு திறக்கும் புனித இப்தார் நிகழ்விற்கும் மாற்றுமதத் தலைவர்கள்,கிராம சேவகர்கள் உள்ளிட்டோரை அழைத்து எமது இன நல்லுறவை மேலும் வளர்த்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கிராமத்திற்கு மக்கள் தொடர்ந்து குடியேறிய வண்ணமே காணப்படுகின்றனர்.
குறித்த கிராமத்திற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பலமுறை வருகை தந்து பார்வையிட்டுச் சென்றும் இன்னும் எந்தவொரு நிரந்தர வீடும்; இங்கு நிர்மாணிக்கப்படவில்லை என அந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
ஆகவே ஆறு மாதத்திற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட கொட்டில்களில் சுமார் 08வருடங்களாக காலம் கழிக்கும் சிகரம் குக்கிராம மக்களுக்கு இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் நிரந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களாவர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும்.
இது தொடர்பாக அவசர தீர்மானத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டுமென சிகரம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Leave a comment