காத்தான்குடி: இலங்கையில் காத்தான்குடிக்கு மாத்திரமே சொந்தமான பெருநாள் பஸார் கடைத்தொகுதிகள் ‘ஈதுல் பித்ர்’ மற்றும் ‘ஈதுல் அல்ஹா’ ஆகிய இரு பெருநாட்காலங்களிலும் நூற்றாண்டு காலமாக காத்தான்குடியில் இடம்பெற்று வருவது ஓர் தனிச் சிறப்பு!
‘பொம்பு றோட்டு’, ‘ஆல’ என முன்னோர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த பெருநாள் பஸார் முழுக்க சிறுவர்களுக்குரியதாக அமைந்து வருவது வரலாறு.
ஆதி கால காத்தான்குடியின் மையப் பகுதியாகக் கருதப்பட்டு வந்த காத்தான்குடி 4, மற்றும் 6 பிரிவுகளை இணைக்கும் பிரதான வீதியில், செயின் மௌலானா தைக்கிய்யாவின் முன்பாக இருந்து குட்வின் சந்திவரையுள்ள பிரதான வீதி வரைக்கும் மேற்கு பக்கமாக இத்தகைய பெருநாள் பஸார்கள் நூற்றாண்டுகளாக இடம்பெற்று வந்தன.
இவற்றுக்கு பின்னால் அநை;துள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்குச் சொந்தமான மையவாடிகளில் ஆதிகால பொம்மி மரங்களும் ஆல மரங்களும் காணப்பட்டதால், இவ்விடத்தை பொம்புறோட்டு அல்லது ஆல என முதியோர்கள் இன்றும் அழைப்பது அதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
இறுதியாக 1990 வரையுள்ள காலப்பகுதியில் இந்த பொம்பு றோட்டு குறித்த இடத்தில் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் தமிழ், முஸ்லிம் உறவுகள் விடுதலைப் புலிகளால் சிதைக்கப்பட்டு, பிரதான வீதிக் குண்டு வெடிப்புகள் மற்றும் அவை சார்ந்த பயங்கரவாதச் செயல்களின் காரணமாக பாதுகாப்புக் கருதி 1991 நோன்புப் பெருநாள் கடற்கரை வீதிக்கு அதி பாதுகாப்புடன் மாற்றிப்பட்டது.
அதன் பின்னர் 2000 ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டது. இறுதியாக கடந்த வருடம் பஸ்மலா சந்தியில், காத்தான்குடி 6, டொக்டர் அகமட் பரீட் மாவத்தையில் பெருநாள் பஸார் இடம்பெற்றது.
எனினும், பொம்பு றோட்டு என்பது செயின் மௌலான தைக்காவுக்குரியது. பல ஆண்டு காலமாக குறித்த பள்ளிவாயலே இந்த பொம்பு றோட்டை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததுடன் அதற்கான வருமானத்தையும் குறித்த பள்ளிவாயலே பெற்றிருந்ததும் வரலாற்று விடயம்.
இதன் பின்னர் புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு இத்தகைய பெருநாள் பஸார் வருமானம் கிடைத்து வந்தது. கடந்த வருடம் மீண்டும் செயின் மௌலான தைக்காவுக்கு வருமானம் சென்றிருந்தது.
தற்பொழுது ஊரின் பல விடயங்களில் உரியவர்களை அணுகி பேசாமல் நேரடியாக தங்களது அதிகாரங்கள் ஊடாக நுழையும் நகர சபைத் தவிசாளர் ஊடாக, நகர சபையின் கீழ் அல்லது தவிசாளரின் தனிப்பட்ட முடிவின் கீழ், காத்தான்குடி 4, குபா ஜூம்ஆ பள்ளிவாயல் அருகில், ஆற்றங்கரை ஓரத்தில் இம்முறை நோன்புப் பெருநாள் பஸாருக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பொம்பு றோட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தில் அல்லது தனியார் காணியொன்றில் இந்த பெருநாள் பஸாரை காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் அவர்கள் ஏற்பாடு செய்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பவை பற்றி இதுவரை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், பொம்பு றோட்டை, வழமையான இடமான செயின் மௌலான முன்னிலையில் அதன் நிர்வாகத்தின் கீழ் நடாத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இதனால் தவிசாளருக்கும் செயின் மௌலானா தைக்கிய்யா நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்கிடையில் மனக்கசப்புக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.
பெருநாள் பஸார் என்பது குறிப்பாக சிறுவர்களுக்குரியது. ஊரிலுள்ள சிறுவர்கள் ஓன்று சேர்ந்து பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைவரும் ஒன்று சேரக்கூடிய காத்தான்குடியின் மத்திய பகுதியில் அமையப்பெறுவதையே காத்தான்குடி மக்கள் விரும்புகின்றனர்.
அது மாத்திரமன்றி, சமாதான சூழலின் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் இந்த பொம்பு றோட்டு பெருநாள் பஸாரில் கலந்து கொள்வதும் ஓர் சிறப்பம்சம்.
இது பற்றிய மேலதிக விபரங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படும்.

Leave a comment