இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பத்ர்

badrமதீனா ஹிஜிரத்தின் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றியானது குறைஷி காபீர்களை ஆத்திரமடையச் செய்தது மட்டுமல்லாமல் மதீனாவில் உருவாக்கப்படும் புதிய இஸ்லாமிய சமூக அமைப்பு தமக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமையலாம் என அவர்கள் அஞ்சினர். மக்காவை விட மதீனா எல்லா வகையிலும் உயர்வடைவதை விரும்பவில்லை.

எனவே குறைஷியர்கள் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்தும் தொல்லை கொடுத்த வண்ணமே இருந்தனர். இந்நிலையில் தான் ஹிஜ்ரி 2ம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 17ல் மக்கா குறைஷியருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பத்ர் எனும் யுத்தம் இடம்பெற்றது. நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இது முதல் யுத்தமாக விளங்குகின்றது.

யுத்தத்திற்கான காரணம்

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஸ் என்பரின் தலைமையில் 12 பேரைக் கொண்ட சிறிய குழுவொன்றை நியமித்திருந்தார்கள். இக்குழுவினர் நக்லா என்ற இடத்தில் குறைஷிக் குழுவொன்றைச் சந்தித்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது குறைஷிக் குழுவைச் சேர்ந்த அம்றிப்னு ஹழ்றமி என்பவர் கொல்லப்பட்டதோடு மற்றும் இருவர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் கொண்ட குறைஷியர் முஸ்லிம்களோடு போர் செய்யத் தயாராகினர். இந்த நக்லா கலவரமே பத்ர் யுத்தத்திற்கான பிரதான காரணியென வரலாற்று ஆசிரியர் அத்தபரிக் கூறுகின்றார்.

போர் ஆயத்தம்

நக்லா கலவரத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மக்கா குறைஷியர்கள் போர் பிரகடனம் செய்தனர். இச்சந்தர்ப்பத்திலேயே குறைஷியர்களின் செல்வத்தோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அபுசுபியானின் தலைமையிலான வர்த்தகக் குழுவினரை முஸ்லிம்கள் வழிமறித்து தாக்கியதாக வந்தி ஒன்று மக்காவில் பரவியது. ஏற்கனவே யுத்தத்திற்கு தயாராகவிருந்த மக்கா குறைஷியர்கள் ஆயிரம் வீரர்கள் கொண்ட படையொன்றினை அபுஜெஹிலின் தலைமையில் மதீனாவுக்கு அனுப்பி வைத்தனர்.

குறைஷியர்களின் நடவடிக்கை பற்றி கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அபுசுபியானின் தலைமையிலான வர்த்தகக் குழுவை வழிமறித்து சிறைப்படுத்த தீர்மானித்தார்கள். முஸ்லிம்களின் வருகையை கேள்வியுற்ற அபுசுபியான் வழக்கமான பாதையைவிட்டு விட்டு மேற்குப்புற கடற்கரை வழியாக மக்காவுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது 313 தோழர்களுடன் மதீனாவுக்கு தென் மேற்கேயுள்ள பத்ரை நோக்கிச் சென்றார்கள். முஸ்லிம்கள் அங்கு செல்வதற்கு முன்னதாகவே குறைஷிகள் அங்கு சென்று தமக்கு வசதியான ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தனர். முஸ்லிம்கள் எவ்வித வசதியுமில்லாத ஓரிடத்தில் தமது முகாமை அமைத்துக் கொண்டனர்.

badr[1]
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை

அன்றிரவு நபிதோழர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் காலைவரையிலும் அல்லாஹுவை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்விடம் இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று, இறைவனே நீ வாக்களித்ததை தந்தருள்வாயான. இறைவனே முஸ்லிம்களின் இச்சிறிய கட்டத்தினரை அழித்து விடுவாயானால் இப் புலியில் உன்னை வணங்க யாருமிருக்கமாட்டார்கள் எனப் பிரார்த்தனை புரிந்தார்கள். இப் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் பின்வருமாறு நபி (ஸல்) அவர்களுக்கு வாக்கழித்தான்.

உங்களுக்கு உதவி புரியுமாறு உங்கள் இறைவனிடம் உதவியை நாடிய போது (அணி அணியாக உங்களை) பின்பற்றிவரக் கூடிய ஓராயிரம் வானவர்களைக் கொண்டு உதவிபுரிவேன் என்று உங்களுக்கு வாக்களித்தான். (8:9) நபி (ஸல்) அவர்கள் போரில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தன் தோழர்களுக்கு விளக்கினார்கள்.

badr[1] (2)
போரின் ஆரம்பம்

போரின் ஆரம்பத்தில் இருதரப்பிலிருந்தும் மும்மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டு நேருக்கு நேர் போராட்டம் ஆரம்பமானது. இதில் நபித் தோழர்கள் ஈமானிய வலிமையுடன் எதிரிகளை வீழ்த்தினர். இப்போரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைஷிகளின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்த போதிலும் அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்கள் எதிரிகளை மிகவும் சுலபமான முறையில் தோற்கடித்தனர். குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல், உத்பா, உமையா, வலித் உட்பட 70 குறைஷியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 70 பேர் முஸ்லிம்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களில் 14 பேர் கொல்லப்பட்டார்கள்.

வெற்றியின் விளைவுகள்

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பத்ர் வெற்றியானது ஓர் அத்திவாரமாக அமைந்ததென்றால் அது மிகையாகாது. இந்த வெற்றிக்குப் பின் இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. அல்லாஹ் இப்போரின் மூலம் முஸ்லிம்களுக்கு பல படிப்பினைகளை வைத்துள்ளான். எதிரிகள் அதிக எண்ணிக்கையுடையவர்களாயினும் அல்லாஹ்வின் உதவியின்றி எவரும் வெற்றி பெற முடியாது என்பதை இப்போரின் மூலம் உணர்த்தியுள்ளான். அல்லாஹ்வை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வளவு சொற்பமானவர்களாக இருந்தாலும் அவனின் உதவி நிச்சயம் உண்டு என்ற பாடமும் இதன் மூலம் கிடைக்கின்றது.

badr

இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியுற்றிருந்தால், இஸ்லாம் அன்றே அழிந்து போயிருக்கும். அறபு நாடெங்கும் இஸ்லாம் தனது சொந்த ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள இந்த வெற்றி உதவியது. முஸ்லிம்களின் உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்தவும் இஸ்லாத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி சமைக்கவும் துணைபுரிந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு மேலும் இந்த வெற்றி புகழை ஈட்டிக் கொடுத்தது. மதீனாவில் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் ஊக்கத்தோடு எவ்வித பீதியுமின்றி வாழ ஆரம்பித்தனர். பிற்காலத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களின் வெற்றிகளுக்கு இப்போர் அத்திவாரமாக அமைந்தது எனலாம்.

Published by

Leave a comment