மெட்ரிட்: ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் இதுவரைக்கும் 80 பேர்கள்வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். மெட்ரிட் நகரத்துக்கும் பெர்ரோல் நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த ரயில்சந்தியானோ த கொம்போஸ்தலா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திலிருந்து வழுவியது. விபத்துக்குள்ளான நேரத்தில் குறித்த ரயிலில் 220 பேர் இருந்தனர்.
ஸ்பெயினைப் பொறுத்தவரை பல தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய ரயில் விபத்து இது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிடவுள்ளார். அவர் சந்தியாகோ த கொம்போஸ்தலாவில் பிறந்தவர்.
இன்று வியாழனன்று வருடாந்த கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை முன்னிட்டு கத்தோலிக்க யாத்ரீகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த விபத்தினால் வைபவ நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Leave a comment