கொழும்பு: ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எடுத்த முயற்சியை பாராட்டுகின்றோம். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
இதுவரை காலமும் மத்திய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்றி அரசாங்கத்தினால் நடத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது மாகாண அரசாங்கத்தையும் நடத்த முடியாமல் தயாசிறி ஜயசேகரை இழுத்துக்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஒன்றிணைப்போம் என்ற அமைப்பின் சார்பில் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அசாத் சாலி அங்கு மேலும் கூறியதாவது
மத்திய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்றி அரசாங்கத்தினால் நடத்த முடியாமல் இருந்தது. தற்போது இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சென்றவர்களே இயக்கிவருகின்றனர். ஆனால் தற்போது மாகாண அரசாங்கத்தைக் கூட நடத்த முடியாத அளவுக்கு அரசாங்கம் சென்றுவிட்டது. அதனால் வடமேல் மாகாணத்தில் போட்டியிட வைக்க ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தயாசிறி ஜயசேகரை இழுத்துக்கொண்டுள்ளனர்.
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்ததும் அரசாங்கம் பயந்துவிட்டது. அதனால் அவரின் கடந்த கால தீர்ப்புக்களை ஆராயவேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார். அவர் நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்று தற்போது 10 வருடங்கள் கடந்துவிட்டன.
மாகாண சபை முறைமையானது வடக்கு கிழக்கு மக்களுக்காகவே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை மாகாண சபை வடக்குக்கு செல்லவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்கள் குறித்து பயப்படுகின்றனர். ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன. அவரைத் தாண்டி எதனையும் செய்ய முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
விரட்டினாலும் அரசாங்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கத்தைவிட்டு விலகினால் அதியுயர் பீடத்தில் உள்ள அனைவரையும் அரசாங்கம் பக்கம் இழுத்தெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. கட்சிகளை உடைத்தமை தொடர்பில் ஜனாதிபதி சாதனையே படைத்துள்ளார். தற்போது கூட்டமைப்பையும் உடைக்க முயற்சிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எடுத்த முயற்சியை பாராட்டுகின்றோம். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும் என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தகவல் வெளியிடுகையில்
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது எமக்கு கிடைத்த வெற்றியாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு முயற்சித்தனர். தற்போது அதனையும் கைவிட்டு 13 ஆம் திருத்தத்துக்கு அமைவாகவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்றனர். இதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களே காரணமாகும்.
13 ஆம் திருத்தத்துக்கு அமைய தேர்தலை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியவர்கள் இன்று மெளனமாக இருக்கின்றனர். அவர்கள் அடுத்த பிறவியலாவது 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதாக கூறுகின்றனர்.
எது எவ்வாறெனினும் வடக்குத் தேர்தல் நடைபெறுவதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். வடக்குத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தோல்வி நிச்சயமாகும். வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அரசாங்கத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.
– வீரகேசரி
Leave a comment