கிழக்கு மாகாணசபை எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்!

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]கொழும்பு: கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இரகசிய கூட்டமொன்றில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 13வது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் அரசாங்கத்தின் நகர்வுக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவ்வாறான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டால் அரசாங்கம் 13 வாக்குகளை மாத்திரமே பெறும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கல்முனை பிரதான வீதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் நகர்வு தொடர்பில் தனது ஏமாற்றத்தை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் மிகப் பலமிக்க அதிக பிரதிநிதித்துவமும் கொண்ட முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அத்தகைய தெரிவுக்குழுவினால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் குப்பைக் கூடையினுள் வீசப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

13வது திருத்தத்தில் மாற்றம் செய்யவதற்கு எதிராக கிழக்கில் விமர்சனங்கள் அதிகரித்து வருவதாகவும் கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மாகாண சபையை கலைத்து விட்டு மாகாணத்தின் நிருவாகத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்களும், 13வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கு 07 ஆசனங்களும், அந்த சட்டத்தை ஆதரிக்கும் பிள்ளையானும் 2 ஆசனங்களும் உள்ளன.

இதனால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடையும் என கருதப்படுகிறது. 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 24 வாக்குகள் கிடைக்கும் என்பதால் அதற்கு முன்னர் மாகாண சபையை கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரச தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. Jp

Published by

Leave a comment