காத்தான்குடியில் ரமழான் இரவுத் தொழுகைகளில் பெண்கள் அதிக ஆர்வம்!

kattankudy (3)– விசேட நிருபர்

காத்தான்குடி: தற்பொழுது உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை அடைந்து, நல்லமல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காத்தான்குடியில் இம்முறை அதிகளவான தாய்மார்களும், சகோதரிகளும் நள்ளிரவு வரை இறை வணக்கங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னரான காத்தான்குடி வரலாற்றில் ஆண்களுக்கு மாத்திரமே பள்ளிவாயல்களில் ரமழானைச் சிறப்பிக்க அனுமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இன்று அந்நடைமுறை மாறி,  தற்பொழுது பெண்களுக்கும் இவ்வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் அதிகளாவான பெண்கள் இந்நல்லமல்களில் ஈடுபடுவதற்கு குடும்ப சகிதம் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

இதனால் இஷாத் தொழுகைக்குச் செல்லும் தாய்மார்களும் சகோதரிகளும், புனித அல் குர்ஆன் வசனங்களை  ஹாபிழ்களின் அழகிய கிறாஅத்துடன் கேட்டு, இருபத்து மூன்று ரக்அத்துக்களை அல்லது 11 ரக்கஅத்துக்களை இனிதாக தொழுது வருகின்றனர்.

இதற்கு முன்னர் பெண்களுக்கான தொழுகைகள் அவ்வப்பகுதி வீடுகளில் ஹாபிழ்களைக் கொண்டு அல்லது மௌலவிமார்களைக் கொண்டு நடாத்தப்பட்டு வந்தன. சிறிய சூராக்களை ஓதி, விரைவாக தொழுகைகளை முடிக்கும் ஓர் அமைப்பாக இந்நடைமுறைகள் அப்போதைய காத்தான்குடியில் இருந்து வந்தன.

எனினும் அந்நடைமுறைகள் தற்பொழுது மாறி, பெண்களும் அல்குர்ஆனை கேட்டு, தொழுவதற்கான சந்தர்ப்பம் அமையப்பெற்றதை சகல சகோதரிகளும், தாய்மார்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

பொதுவாக பிரதான ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஆண்களுக்கு  வழமைபோல் பள்ளிவாயல் தரைமாடியிலும், பெண்களுக்கு மேல் மாடியிலும் தொழுகை இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் மார்க்க முரண்பாடுகள், ‘கிறீஸ் மனிதன்’ பிரச்சினைகள் காரணமாக ரமழான் இரவுத் தொழுகைகள் சில நாட்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment