’13’ ஐ ஆதரித்து கிழக்கு மாகாண சபையில் பிரேரணை மு.கா.குழுத் தலைவர் ஜெமீல் நாளை சமர்ப்பிக்கிறார்!

jameel– பழுலுல்லாஹ் பர்ஹான்

திருக்கோணமலை: அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் நாளை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை அரசமைப்பில் இருந்து நீக்கி விடுவதற்கோ அதன் அதிகார வலுவை குறைப்பதற்கோ முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இணங்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மேலும் கூறியதாவது;

முஸ்லிம்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அவசியம் மிகவும் உணரப்பட்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இக்கட்சி எந்த சக்திக்கும் விட்டுக் கொடுக்காமலும் அஞ்சாமலும் சமூகப் பற்றுடன்- துணிச்சலுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கிறது.

இந்த இக்கட்டான தருணத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக இது விடயத்தில் நாம் வாய் மூடி மௌனிகளாக இருப்போமாயின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற சமூக இயக்கம் முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத ஒரு விடயமாகவே மாறி விடும் என்பதை மறுதலிக்க முடியாது.

அந்த வகையில் இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளக் கூடியதும் சமூக ரீதியான காப்பீடுகளை தரவல்லதுமான அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு பேரினவாத சக்திகள் குரல் எழுப்பிக் கொண்டு- அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்ற இச்சூழ்நிலையில் அவற்றை முறியடிப்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றன.

அது போன்று ஏனைய முஸ்லிம் தலைமைகளும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் 13ஆவது திருத்த சட்டத்தை பாதுகாத்து சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான பிரேரணைகள் சில மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையிலும் அவ்வாறன பிரேரணை ஒன்று கொண்டு வரப்படலாம். அதன்போது முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்து- அம்மசோதாவை தோற்கடிப்போம்.

எவ்வாறாயினும் அப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டாலும் சமர்ப்பிக்கப் படாவிட்டாலும் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் முஸ்லிம்களை பெரும்பானமையாகக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் 23ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எமது தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் நான் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.

தனிநபர் பிரேரனை பத்திரம்

அதேவேளை தனது தனிநபர் பிரேரனையை 23.07.2013 செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் சபை நிகழ்ச்சி நிரலில் அவசர பிரேரணையாக சேர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலாளரிடம் கோரியுள்ளார்.

பேரவைச் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தனிநபர் பிரேரனை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

‘மாகாண சபை முறைமையானது இலங்கை மக்களுக்கு தங்களது மாகாணரீதியான தேவைகளினை அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் உள்ளக அறிக்கையினை தொடர்ந்து 10.05.2008 ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் கிழக்கு மாகாணசபை முதன் முறையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள இன மக்கள் இரண்டு (2) தடவைகள் தங்களது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவுசெய்து கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபைக்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இன பிரதிநிதிகள் தெரிவுசெய்யபட்டதுடன் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

மாகாண சபையானது எப்போதும் இந்த நாட்டின் அதிகாரத்தினையும், இறைமையையும் பேணி பாதுகாத்துள்ளதுடன் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம் மக்களுக்கு மாகாணரீதியாக தங்களது தேவைகளினை இனம் கண்டு தாங்களே அதற்குரிய தீர்வையும் கண்டு கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டதானது வரவேற்கத்தக்கது என மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே கிழக்கு மாகாணசபைக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் இடைக்கால அறிக்கை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டு ஜனாதிபதி அவர்கள் 13 வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என கோரியதுடன் அதன் ஒரு உள்ளகமுயற்சியாக சம்பந்தப்பட்ட அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கியதாக ஒரு இறுதித்தீர்வு எட்டும்வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 13வது திருத்தம் சாத்தியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த சபையானது 13 வது திருத்தத்தினை யாப்பில் இருந்து நீக்கிவிடுவதற்கோ அல்லது அதிகாரங்களினை குறைத்து விடுவதற்கோ எந்த விதத்திலும் அனுமதியோ ஆதரவோ வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் 13 வது சட்டத்திருத்தத்தினை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment