ரெடிங்: தென்கிழக்கு இங்கிலாந்தின் மிக முக்கிய நகரமாகக் கருதப்படும் ரெடிங் (Reading) நகரின் ஒக்ஸ்போர்ட் வீதியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்டு வந்த மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாயல் இம்முறை ரமழானில் திறக்கப்பட்டது.
உலக முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்துவரும் ரெடிங் நகரில், லண்டன் வீதி மற்றும் ஒக்ஸ்போர்ட் வீதி ஆகியன மிக பிரதான வீதிகளாகும். ரெடிங் நகரின் கிழக்கு பகுதியில் லண்டன் வீதியும், மேற்குப் பகுதியில் ஒக்ஸ்போர்ட் வீதியும் அமைந்திருக்கின்றது.
லண்டனுக்கு மிக சமீபமாக அமைந்திருக்கும் நகரம் என்பதுடன், எலிசபெத் ராணியின் பரம்பரைச் சொத்துக்களும் அவரது பூர்வீகத்துக்கும் பெயர் போன ஓர் இடம் மாத்திரமன்றி, பிரதான வைத்தியசாலையும் இந்நகரில் அமைந்திருக்கின்றது.
இப்பகுதிகளில் முஸ்லீம்கள் செறிந்து வாழ்ந்து வருவதுடன், ஹலால் உணவுகளுக்கான கடைத் தொகுதிகளும், அராபி, இந்திய மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி நாட்டின் உணவகங்களும் காணப்படுவதுடன் இதர ஜூம்ஆ பள்ளிவாயல்களும் இப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன.
முஸ்லிம்களின் கலாச்சாரங்களைப் பிரதிபளிக்கும் தொப்பி, தலைப்பா, தாடி, அபாயா, ஹிஜாப் தோற்றங்களில் மக்கள் நடமாடுவதையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும்
வாகண நெரிசல்மிக்க மற்றுமொரு வீதியாகக் கருதப்படும் ஒக்ஸ்போர்ட் வீதியில், இப்பள்ளிவாயல் தற்பொழுது புதுப்பொழிவுடன் பார்ப்பவர்களை ஈர்த்து வருகின்றது.
புனித ரமழானை முன்னிட்டு, இப்தார் விசேட ஏற்பாடுகளும், தறாவீஹ் தொழுகைகளும் இப்பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
சுமார் ஆயிரம் பேர்கள் தொழக்கூடிய கொள்ளளவை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இப்பள்ளிவாயல், தரைகீழ் வாகனத் தரிப்பிடத்தைக் கொண்டது.
இரவு 11:30 மணிக்கு ஆரம்பமாகும் இஷாத் தொழுகை, அதன் பின்னரான தறாவீஹ் தொழுகைக்கு ஆண்கள், பெண்கள் என சுமார் ஐநூறு பேர்கள் அளவில் தினமும் இரவு நல்லமல்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
இப்பள்ளிவாயலுக்கான நன்கொடைகள் மிக அவதானமாக சேகரிக்கப்பட்டு வந்தமை ஓர் விசேட அம்சம். ஏனெனில் பரவலாக பல முஸ்லீம்களின் கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு மதுபானங்களை தங்களது கடைகளில் விற்பவர்களது நன்கொடைகளைப் பெறாமல், ஹலாலான நன்கொடை, அன்பளிப்புக்களை மாத்திரம் ஏற்றுக் கொண்டு அமைக்கப்பட்ட இப்பள்ளிவாயல் இன்று ரெடிங் நகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றமை உலக முஸ்லிம்களுக்கு ஓர் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ரெடிங் நகரில் அமைந்திருக்கம் 14 பள்ளிவாயல்களுள், பெரிய பள்ளிவாயலாக மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாயல் திகழ்கிறது.
கி.பி. 1707 இல் முதன் முறையாக ஐக்கிய இராச்சியத்துக்குள் இஸ்லாம் வந்தது. சுமார் 1500க்கும் அதிகமான பள்ளிவாயல்கள் இன்று ஐக்கிய இராச்சியத்திற்குள் அமைந்திருக்கின்றன. இதைத் தவிர, இஸ்லாமிய, தஃவா நிலையங்கள், மத்ரஸாக்கள் என மொத்தம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய அமைப்புக்கள் ஐக்கிய இராச்சியத்துக்களுக்ள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Leave a comment