பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம் என்பன இணைந்து மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் ஆட்கொல்லி டெங்கு நுளம்புகள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இன்று புதன்கிழமை டெங்கு பரிசோதனைகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ. எல். நசிர்தீன், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன் போது அஷ் ஷூஹதா வீதி, சாவியா வீதி, ஊர் வீதி, செயினுலாப்தீன் வீதி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்கள், காணிகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா, நிதுசன், சங்கர், புலேந்திரன், ஆரையம்பதி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதர்களான பசீர், ரவிதர்மா, கிருபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment