ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் முஸ்லிம்கள் இன்னும் எதிர் காலத்தில் வாக்களிக்கலாமா? – ஸ்ரீ.ல.மு.கா முன்னாள் மாநகர உறுப்பினர் என்.கே. றம்ழான்

ramlanபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட பன்றியின் உறுப்புக்களைக் கொண்டு மிக மோசமான வகையில் தாக்குதல் நடாத்திய சூத்திரதாரிகளை பாதுகாப்புத்தரப்பு அடையாளங்கண்டு நீதியின் முன் நிறுத்துவதோடு பள்ளிவாயல்களை தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கு உடன் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என். கே. றம்ழான் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று வரை எத்தனையோ பள்ளிவாயல்கள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி இருந்த போதிலும் மஹியங்களை மஸ்ஜிதுல் அரபா ஜூம்ஆப் பள்ளிவாயல் முஸ்லிம்களுக்கு மிகவும் ஆத்திரத்தை தூண்டக் கூடிய வகையில் இஸ்லாத்தினாலும் முஸ்லிம்களாளும் வெறுத்து ஹராமாக்கப்பட்ட மிருகமான பன்றியின் உறுப்புக்களையும் அதன் இரத்தத்தினையும் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு இனத்தாலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படாத மிக கீழ்த்தரமானதொரு தாக்குதலாகும்.

இவ்வாறானதொரு செயற்பாடு இனிமேல் எந்தவொரு பள்ளிவாயலுக்கும் இடம்பெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறித்த மஹியங்கனை பள்ளிவாயல் தாக்குதல் மூலம் முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்து புனித றமழான் மாத்தில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு கடும் போக்கு இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல் இதுவாகும்.

இவ்வாறான செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு மஹியங்களை பள்ளிவாயலை தாக்கியது யார்? என்று கேள்வி கேட்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் முஸ்லிம்கள் இன்னும் எதிர் காலத்தில் வாக்களிக்கலாமா? அல்லாஹ்வையும் அவனுடைய புனித வேதமாகிய இஸ்லாத்தையும் கலிமாச் சொல்லி ஈமான் கொண்ட எந்தவொரு முஸ்லிமும் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி சம்மந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை இந்த அரசிற்கு வாக்களிக்கக் கூடாது.

இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை கண்டு பிடிக்க மோப்ப நாய்களை கொண்டு வருகின்ற பாதுகாப்புத்துறையினருக்கு ஒரு இனத்தின் மதஸ்தலங்கள் மீது தொடர்ச்சியாக மிக மோசமாக தாக்குல் நடாத்தும் காடையர்களை கண்டு பிடிக்க ஏன் மோப்ப நாய்களை கொண்டுவர முடியாது? எங்கேயாவது ஒரு மூலை முடுக்கில் ஒரு குற்றச் செயல் இடம்பெற்று விட்டால் அதனை துப்புத் துலக்கி குற்றவாளிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வல்லமை மிக்க இந்த நாட்டின் பாதுகாப்புத்துறையினருக்கு மகியங்கனை பள்ளிவாயல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்த முடியாதது வேடிக்கையும் வினோதமுமானது.

முஸ்லிம்களின் உரிமை விடயத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் விடயத்திலும் இந்த அரசாங்கத்தை வற்புறுத்தி தடுத்து நிறுத்த முடியாத அமைச்சர்களும் ஆளும் கட்சி அரசியல் வாதிகளும் உரிமைக்காக அல்லது அநீதிக்கு எதிராக போரடும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று எந்தவொரு அமைச்சுப் பதவி அதிகாரமும் இல்லாமல் எதிர் கட்சியாக இருந்து கொண்டு உரிமைக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முடியுமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சுப் பதவிகளில் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளைகளாக அவரின் அருகில் வாரத்தில் பல தடவைகள் நேரடியாக சந்திக்கும் ஆளும் தரப்பு அரசியல் வாதிகளால் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க ஏன் முடியாது.?

இனியும் இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் பெயர் அளவில் அறிக்கை விட்டு விட்டு அமைதியாக அமைச்சுப் பதவியை பாதுகாத்துக் கொண்டு இன்னும் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பீர்களானால் நாளை அல்லாஹூவின் சங்கிதானத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவீர்கள் நேற்று ஹலால் முத்திரை தடுக்கப்பட்டது, இன்று பன்றி உறுப்புக்கள் கொண்டு பள்ளிவாயல் தாக்கப்பட்டது, நாளை எது நடக்கும் என்பது கேள்விக்குறி எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment