காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கைக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பதில்

puvi rahபுவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்குவதற்கு காத்தான்குடி உலமாக்கள் அங்கீகாரம்’ என்ற ‘வார உரைகல’ பத்திரிகையின் செய்தி தொடர்பாக கடந்த 10ம் திகதி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கை உப்புச்சப்பில்லாத ஒரு மழுப்பல் அறிக்கையேயாகும்.

கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் 42வது அமர்வில் 9% வட்டிக்கு கடனாகக் கிடைக்கும் பணத்தை எடுத்து JCB பெக்கோ இயந்திரம் ஒன்றை வாங்குவது தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த சர்வாதிகாரமுள்ள தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், அவ்வாறு கிடைக்கும் பணத்தைப் பெற்று வாகனம் வாங்கலாம் என்பதற்கு பல தரப்பு உலமாக்களும் எனக்கு பத்வா வழங்கியுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகவே கூறியிருப்பதனை அந்த ஒலிப்பதிவைச் செவியேற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினரும் அவர்களால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழுத் தலைவரான மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் பலாஹி அவர்களே இவ்வாறு பத்வாவொன்றை வழங்கியதாக நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் அவர்கள் தெரிவித்தார் என்று 265வது ‘வார உரைகல்’லில் வெளிவந்த செய்தியின் இறுதிப் பகுதியில் தெரிவித்திருப்பதை குறித்த மௌலவி அவர்கள் மறுத்துள்ளதுடன், இந்த விடயத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லையென தெரிவித்திருப்பதாகவும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வார உரைகல்’ செய்தி தொடர்பில் கவனம் செலுத்திய காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினர், மௌலவி AGM. அமீன் அவர்களின் மறுப்பை அறிந்து கொண்டதுடன் அடுத்த கட்டமாக நகர சபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளரைத் தொடர்பு கொண்டு ‘அவ்வாறு பத்வா வழங்கிய சகல தரப்பு உலமாக்களும் யார் ?’ என்பதைக் கேட்டறிந்திருக்க வேண்டும்.

இந்தப் படிமுறையைக் கையாளாது ‘வார உரைகல்’ செய்திக்கு அரைகுறையாகவும், மழுப்பலாகவும் உப்புச்சப்பில்லாத விளக்க அறிக்கையொன்றை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினர் அவசரப்பட்டு வெளியிட்டிருக்கக் கூடாது. அது, மார்க்க அறிஞர்கள் எனப்படும் உலமாக்களுக்குரிய பண்பும், அழகுமாகத் தெரியவில்லை.

அத்துடன், ‘தனி நபர்கள் வழங்குகின்ற பத்வாவிற்கு ஜம்இய்யா எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டாது’ என்ற அவர்களின் கூற்றும் சிறுபிள்ளைத்தனமானதாகும்.

ஆதம்லெப்பை, உதுமாலெப்பை, சுமாலெப்பை போன்ற தனிநபர்கள் எவரும் இப்படியான மார்க்க விவகாரங்களில் பத்வாக்கள் வழங்குவதில்லை.

அரபுக்கல்லூரியொன்றில் ஆறு ஏழு வருடங்கள் கற்றுத்தேறிய உலமா ஒருவரோ அல்லது பலரோதான் இவ்வாறான விடயங்களில் பத்வாக்களை வழங்குவது நடைமுறையிலுள்ள விடயமாகும்.

சர்வாதிகாரமுள்ள தவிசாளர் தனது சபை உறுப்பினர்களுக்கான விளக்கத்தில் ‘பல தரப்பு உலமாக்களிடமும் நான் கேட்டேன். அவர்கள் எடுக்கலாம் என்று பத்வா தந்திருக்கிறார்கள்’ எனத் தெளிவாகக் கூறியிருப்பதை ஒலிப்பதிவின் மூலமாகச் செவியேற்ற பின்னரும் ‘தனி நபர்கள்’ என்ற சொற்பிரயோகத்தை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அவர்களின் அறிக்கையில் பிரயோகித்திருப்பதானது அவர்களின் கேள்வியறிவின் கிரகிப்புத் தரத்தைப் பறைசாற்றுவதாகவே உள்ளது.

காத்தான்குடி ஜ.உ. சபையினர் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல் அது தனிநபர்கள் வழங்கிய பத்வாவாக இருக்குமாயின், அவ்வாறான தனிநபர்கள் வழங்கும் பத்வாக்களை இந்தத் தனித்துவமான இஸ்லாமிய நகரத்தின் முதல் மகனாகக் கருதப்படும் சர்வாதிகாரமுள்ள தவிசாளரும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டு இவ்வாறான மார்க்க விரோதச் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்தார்கள் என்றால், இந்த ஊரில் மார்க்கத்தை நிலைநிறுத்தும் கடப்பாட்டைக் கொண்டுள்ள ஜம்இய்யதுல் உலமா எனப்படும் மார்க்க அறிஞர்களின் சபைக்கு என்ன அந்தஸ்தும், மதிப்பும், மரியாதையும் இருக்கின்றது? என்ற கேள்வி நமக்குள் மறுபுறத்தில் எழுகிறது.

எனவே, சர்வாதிகாரமுள்ள தவிசாளர் சபை உறுப்பினர்களுக்கான தனது விளக்கத்தில் தெளிவாகக் கூறியுள்ளவாறு ‘பல தரப்பையும் சேர்ந்த உலமாக்கள்தான் வட்டிப் பணத்தில் வாகனம் வாங்கலாம் என பத்வா வழங்கியுள்ளார்கள்’ என்பது ஏழாம் வகுப்பே படித்த எனது அறிவுக்குத் தெளிவாகப் புரிந்திருப்பதுபோல் எமதூர் உலமாக்களுக்குப் புரியாமல் போயிருப்பதானது, வல்ல அழ்ழாஹ் மனிதர்களுக்கு அருளியிருக்கும் அவனது அறிவுக் கொடையினது தரத்தையும், விசாலத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

சர்வாதிகாரமுள்ள தவிசாளர் தனது சபை உறுப்பினர்களுக்கான விளக்கத்தின்போது, ஜம்இய்யாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்காத போதிலும், ‘வார உரைகல்’ தனது செய்தியில் மிகத் தெளிவாகவே காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் பெயரையும், அதன் தலைவரான மௌலவி அல்ஹாஜ் SMM. அலியார் பலாஹி அவர்களின் புகைப்படத்தையும் சம்பந்தப்படுத்தியதற்கு நியாயமான காரணம் இருக்கின்றது.

ஊரிலுள்ள எந்தவொரு உலமாவோ அல்லது பல உலமாக்களோ தெரிவிக்கும் கருத்துக்களை எல்லாம் ஒரு மார்க்கத் தீர்ப்பு ‘பத்வா’ என்ற அந்தஸ்துக்கு எடுத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முடியாது.

அப்படியானதொரு நடைமுறை நமதூரில் இருந்திருக்குமாயின் கடந்த காலங்களில் இடம்பெற்ற அப்துல்லாஹ் பயில்வானின் கருத்துக்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிரான போராட்டங்கள், அப்துர் றவூப் மௌலவியின்  வஹ்ததுல் வஜூத் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள்,  கத்தம் மௌலீது கந்தூரி போன்றவைகளுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவையெல்லாம் இடம்பெற்றிருக்கத் தேவையில்லை.

அதிகாரபூர்வமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் அவ்வாறான பிரச்சினைகளில் மிகத் தெளிவான பத்வாக்களை பகிரங்கமாக வழங்கியதனால்தான் அதனை காத்தான்குடி முஸ்லிம்கள் உட்பட இலங்கை முஸ்லிம் சமூகமும் ஏற்றுக் கொண்டு அமுலாக்கம் செய்தது.

இங்கே தற்போது ஏற்பட்டிருக்கின்ற ‘வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கலாம்’ என்ற உலமாக்களின் பத்வாவில் ‘உலமாக்கள்’ சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

ஊரிலுள்ள உலமாக்களின் அங்கீகரிக்கப்பட்ட சபையாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே உலமா ஒருவரின் அல்லது பலரின் ‘பத்வா’வை ஊரின் முதல் மகனான சர்வாதிகாரமுள்ள தவிசாளரே அடியொற்றிப் பின்பற்றுவதாயின், அதற்கு ஆளுந்தரப்பிலுள்ள ஏனைய ஆறு முஸ்லிம் உறுப்பினர்களும் அங்கீகாரமும் வழங்கி அமுல்படுத்துவதாயின் அந்த ‘பத்வா’வின் சமய, சமூகப் பெறுமானமும் அங்கீகாரமும் என்ன? என்பதுதான் கேள்வியாகும்.

‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி’ விடுவது போல மார்க்கம் படித்த அறிஞர்கள் எல்லோரும் ஆளாளுக்கு பத்வாக்களை வழங்கி அதனை ஊரிலுள்ள ஒவ்வொரு சாராரும் பின்பற்றி அமுல்படுத்தவும் தொடங்கினால் நமது மார்க்கத்தின் எதிர்கால நிலைமை என்ன? எனக் கேட்டறிவதே, ‘வார உரைகல்’ செய்தியில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவை சேர்த்துக் கொண்டதன் நோக்கமாகும்.

உலமாக்கள் பத்வா தந்திருக்கிறார்கள் என்று ஒருவனோ ஒரு கூட்டத்தாரோ சொல்லிக் கொண்டு பகிரங்கமாக மதுபானம் அருந்தினால், விபச்சாரத்தில் ஈடுபட்டால் அல்லது மார்க்கத்திற்குப் புறம்பான கருமங்களில் ஈடுபட்டால் அதனை அப்படியே நாம் அங்கீகரித்துக் கொள்வதா?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையோ அல்லது பிராந்திய – பிரதேச ஜம்இய்யாக்களோ அதில் தலையிடத் தேவையில்லையா?

அவர்களால் தெரிவிக்கப்படும் பத்வாவை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லையா?

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தனித்துவமும், கௌரவமும் இந்த விவகாரத்திலும், எதிர்காலத்திலும் பேணப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும்….

எவரையும் மதியாத தன்மையுடன் தன்னிச்சைப் போக்கில் ‘நானே இந்த ஊரைக் கலியாணம் முடித்துள்ளேன்’ என்ற அதிகாரக் கர்வத்துடன் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருகின்ற சர்வாதிகாரமுள்ள தவிசாளருடன் ஜம்இய்யாவின் உலமாக்கள் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பில் உண்மையையும் தெளிவையும் பெறுவதற்கு ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் தான் ‘வார உரைகல்’லின் இந்தச் செய்தியில் ஜம்இய்யாவின் பெயர் இடம்பெறச் செய்யப்பட்டது.

ஊரிலுள்ள நகர சபையோ அல்லது சம்மேளனமோ ஏனைய அமைப்புக்களோ நாம் பின்பற்றும் சத்திய சன்மார்க்கமான தீனுல் இஸ்லாத்தைப் பேணிக் காக்கும் கடமைப் பொறுப்பில் ஜம்இய்யாவின் அந்தஸ்துக்கு நிகராகாது.

அந்த வகையில் மார்க்க அறிஞர்களான உலமாக்களை தமது தேவைகளுக்கு மாத்திரம் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளும் உள்ளுர் அரசியல்வாதிகளின் கீழ்மட்டப் பார்வைகளில் இருந்தும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் ‘உலமாக்கள்’ என்ற சொற்பதத்தை உச்சரித்துக் கொள்ளும் கேவலமான நிலைமைகளில் இருந்தும் அவர்கள் மீட்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.

நமதூர் அரசியல்வாதிகள் அவர்கள் கட்சி மாறும் போதும், உடன்படிக்கை ஒப்பந்தங்களை மீறும் போதும், வட்டிக்குப் பணம் பெறும் தேவையின் போதும் ‘உலமாக்கள்’ என்ற உயர்ந்த பெறுமானமுள்ள சொல்லை ‘பேப்பர் பின்’ மாதிரி தற்காலிக இணைப்புக்கு உபயோகப்படுத்தும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

அமீன் மௌலவி அவர்கள் ஜம்இய்யாவின் பத்வாக் குழத் தலைவர். அலியார் மௌலவி அவர்கள் ஜம்இய்யாவின் தலைவர்.

இதிலே அமீன் மௌலவி அவர்கள்தான் பத்வா வழங்கியதாக தவிசாளர் தெரிவித்ததற்கு நகர சபை உறுப்பினர் றவூப் ஹாஜியார் ‘வார உரைகல்’ தரப்பிலுள்ள ஆதாரமாகும்.

அத்துடன் இதுதொடர்பில் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சிற்றுண்டிச் சாலையில் 02.07.2013 அன்று ‘வார உரைகல்’லிடம் அவர் இதனைத் தெரிவித்தபோது சம்மேளன முக்கியஸ்தரும், மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம். உசனார் அவர்களும் உடன் இருந்தவராகும்.

அது மட்டுமல்ல, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் அறிக்கையைப் பார்வையிட்ட பின்னர் நேற்றறு (12.07.2013) மாலையும் றவூப் ஹாஜியருடன் தொடர்பு கொண்டு அமீன் மௌலவி அவர்களின் மறுப்பு பற்றித் தெரிவித்தபோது….

‘நான் தவிசாளரிடம் நேரில் கேட்பதற்கு முன்னதாகவே அவர் சபைக் கூட்டத்தில் பேசும்போது அமீன் மௌலவி பத்வா தந்திருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் உறுப்பினர்களான அலிசப்ரியும், ஸியாதும் அவரது பேச்சுக்கு குறுக்கே பேசியதால் அது ஒலிப்பதிவில் தெளிவாக இடம் பெறாது போயிருக்கலாம்…’ என்று 02ம் திகதி அவர் தெரிவித்திருந்த அதே தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த இடத்தில் உண்மையில் அமீன் மௌலவி அவர்கள் அவ்வாறு ஒரு பத்வாவை வழங்கி இருக்காமலும் இந்த விவகாரத்தோடு சம்பந்தப்படாமலும் இருந்திருக்கலாம்.

அதேவேளையில் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் (றவூப் ஹாஜியார் கூறியிருப்பதைப்போல) அமீன் மௌலவி அவர்களின் பெயரை சபைக் கூட்டத்திலோ அல்லது சபைக் கூட்டம் முடிந்த பின்னரோ தெரிவித்திருக்கலாம்.

எனினும் மிகத் தெளிவாக ‘உலமாக்கள்’ என்னும் சொல்லை அவர் சபையில் பகிரங்கமாகவே பயன்படுத்தியுள்ளார். எனவே அந்த உலமாக்கள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருக்கும். செயலாளருக்கும் உள்ளது.

தனிநபர்கள் வழங்கிய பத்வா எனக் கூறிக்கொண்டு அவர்கள் இந்த விடயத்திலிருந்து சிறுபிள்ளைத்தனமாகத் தப்பித்துக் கொள்ள முடியாது.

குறித்த நகர சபை அமர்வில் நமதூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் பழுலுள்ளாஹ் பர்ஹான் மாத்திரமே சபையிலிருந்து நேரடியாக அவதானித்துள்ளார்.

அவரது செய்திச் சேவையிலுள்ள எந்தவொரு ஊடகத்திலும் நமது மார்க்கத்திற்கு முரணான, நமதூர் உலமாக்கள் வட்டிக்குப் பணமெடுத்து வாகனம் வாங்கலாம் என ‘பத்வா’ அளித்துள்ள இந்த பாரதூரமான விடயம் வெளிப்படுத்தப்படவில்லை.

முற்று முழதாகவே அது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ‘காத்தான்குடி நகர சபையால் பெக்கோ வாகனம் வாங்குவதற்குத் தீர்மானம்’ என்ற சாதாரண தரத்திலேயே அவரது செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

எனினும் நமது சத்திய சன்மார்க்கமான தீனுல் இஸ்லாத்தின் வரம்பை அப்பட்டமாகவே மீறி அழ்ழாஹ்வுடன் யுத்தம் செய்யும் ஒரு முஸீபத்தான நிலைமைக்கு நமது ஊரைத் தள்ளிவிடும் இப்பாரதூரமான விடயத்தை ‘வார உரைகல்’ ஊடகம்தான் அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் பயந்து பகிரங்கப்படுத்தியது.

அது தொடர்பில் 10.07.2013ல் அறிக்கை வெளியிட்ட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை அதனை ‘வார உரைகல்’ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைக்காது முகவரியில்லாத ஊரின் பேர் தாங்கியுள்ள ஊடகத்திற்கு அனுப்பி விட்டு ‘எமது பங்குக்கு பதிலளித்து விட்டோம். கடமை முடிந்து விட்டது’ என்பது போலத் தப்பித்துக் கொள்ள முற்பட்டிருக்கின்றது.

இது, எமதூர் ஜம்இய்யதுல் உலமாவின் பலவீனமாகும்.

என்றாலும் நாம் அவ்வறிக்கையை எமது இணையதளத்தில் பொறுப்புடன் பதிவேற்றியுள்ளதுடன் எமது டுவீட்டர் குறுந்தகவல் சேவையிலும் பகிரங்கப்படுத்தியுள்ளோம்.

‘எமது காத்தான்குடி உலமாக்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்களையும் நாங்கள் இழுத்துக் கொண்டு இயக்க வேண்டியுள்ளது. இன்றைய நமது உலமா சபை காற்றில்லாத சக்கரமும்இ சாரதி இல்லாத வண்டியும்போல பூஜ்ஜியமாகி இருக்கின்றது’ என்று 10.10.2011ம் திகதியில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் ஊஊ அவர்கள் மிகக் கேவலமாக விமர்சித்தார்.

குபா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அவ்வாறு பகிரங்கமாகக் கூறியதை ஜம்இய்யதுல் உலமாவுக்கு நினைவுபடுத்தும் ‘வார உரைகல்’…

சம்மேளனத் தலைவரின் அக்கீழ்த்தரமான கருத்துக்கு எதிராக துணிவுடன் ஒரு கண்டனத்தைத் தெரிவிக்க முன்வராமல் அந்த நேரத்தில் பதுங்கு குழியில் இருந்த உலமாக்கள்….

இன்று அவர்களின் கௌரவ தலைவர் அலியார் மௌலவி அவர்களின் புகைப்படத்தை பிரசுரித்ததற்காக கண்டனம் தெரிவித்திருப்பதை அவர்களின் கோமாளித்தனம் என்றே கருத வேண்டியுள்ளது.

எனவே, வெளியிடப்பட்ட மழுப்பல் அறிக்கையை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு சர்வாதிகாரமுள்ள தவிசாளரின் கழுத்தைப் பிடித்தாவது ‘வட்டிப் பணத்திற்கு வாகனம் வாங்குமாறு பத்வா வழங்கிய உலமாக்கள் யார்?’ என்பதைக் கேட்டறிந்து அதனை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பையே காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இதனடித் தொடராக விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ‘வார உரைகல்’ மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன்இ இந்த விடயம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சியாகத் திகழும் இவ்வூரின் 35 வீதமான முஸ்லிம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சபை உறுப்பினர்கள் இருவரும் கூட்டாக எழுதியுள்ள கடிதத்திற்கும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்.

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர்

Published by

One response to “காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கைக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பதில்”

  1. ஊர் மகன் Avatar
    ஊர் மகன்

    இவனுகளே இப்படித்தான். காத்தான்குடி உலமா சபை மௌலிது ஓதுவது கூடாது என அண்மையில் மொக்குத்தனமாக பத்வா வழங்கியபோது, கொழும்பிலே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை காரியாலத்துக்கு முன்பாகவும் தெவடகஹ பள்ளிக்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையானது கிளை நிறுவனங்களால் வழங்கப்படும் பத்வாக்கள் செல்லுபடியற்றது என கூறி அகில இலங்கை ரீதியாக தனது இருப்பை பாதுகாத்துக்கொண்டது. இதை சாதகமாக எடுத்துக்கொண்டு அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞான பேரவை உலமாக்களுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை செல்லுபடியற்றது என தூக்கிக்கொண்டு மீண்டும் ஒரு சமாதான உடன்படிக்கையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் ஏற்படுத்திக்கொண்டார்கள் நமதூர் வம்பர்கள் . ஆனால் அதுவரைக்கும் காத்தான்குடி உலமாக்களுடன் செய்த ஒப்பந்தம் செல்லுபடி அற்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வாய் திறக்கவில்லை. மாறாக புகழ்ந்தே பேசினார்கள். கொழும்பு சம்மான்கொட்டே பள்ளியிலும் ஜும்அஹ் பிரசங்கத்தின் போதும் தலைவர் ரிஸ்வி முப்தி கூட நன்றாகவே பேசினார். பின்னர் வாயைக்கொடுத்து மாட்டியதால் மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய வேண்டி ஏற்பட்டது.
    ஆழ சிந்தித்துப்பார்த்தால் நமது அரசியல் தலைமைகள் செய்கிற வேலைகளுக்கு, அவர்கள் ஒரு ஆதாரமாக உலமாகளையும் மார்க்கத்தையும் இழுத்துக்கொள்கிறார்கள். இல்லையென்றால் அந்த அப்பாவி உலமாக்களை சிக்க வைத்துக்கொள்கிறார்கள்

Leave a reply to ஊர் மகன் Cancel reply