காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் அனுசரனையுடன் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஏதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதை தடுப்பதன் மூலம் உயிர்களை காத்தல் எனும் தொனிப்பொருளில் உயிரை காப்போம் – இலவச இருதய சிகிச்சை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பலிகா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் பிரபல வைத்திய நிபுணர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ். எச். எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற உயிரை காப்போம் – இலவச இருதய சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ உயரதிகாரிகள், இராணுவ சிவில் இணைப்பாளர், காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம். ஐ. எம். ஜெஸீம், ஸ்ரீ.ல.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் குப்தா தலைமையில் கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அனில் பெரேரா, சத்திர சிகிச்சைப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் சித்திராங்கனி பெரேரா, டாக்டர் போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இலவசமாக வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இங்கு இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு, உடல் பருமன் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் பெரும் திரளான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு இவ் வைத்திய முகாமில் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment