டோஹா: மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது அதிக வெப்பம் நிலவுவதால் இந்நாடுகளில் வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், துபாய், சவூதி அரேபியா உட்பட்ட நாடுகளில் 44 செல்சியஸ் வெப்ப நிலைக்கு கடந்த சில நாட்கள் சென்றிருந்தன.
புனித ரழழான் நோன்பு உலக முஸ்லிம்களால் தற்பொழுது பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வெளி வேலைத் தொழிலாளர்கள் இந்நாடுகளில் அதிகம் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அதிக வெப்பம் நிலவும் போது, வெளி வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியில் சென்று வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்நாடுகளின் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டிருக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈச்சம் பழங்கள் பழுத்து உதிரும் காலநிலையில் இவ்வாறான வெப்பம் இருப்பது வழமை எனினும், இம்முறை அதிக வெப்பம் இந்நாடுகளில் நிலவுவதை அங்குள்ள ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ஐரோப்பா நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வார காலமாக அதி கூடிய வெப்ப நிலை நிலவி வருகின்றது. 30 செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் நாள் முழுவதும் நிலவுவதால் இரவு வேளைகளில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். புட்புதர்களும், நீரோடைகளும் வரட்சியால் காய்ந்து கிடக்கின்றன.
இந்நாடுகளில் வெயிலில் களியாட்டங்கள் இடம்பெற்ற போதிலும், குழந்தைகள், சிறுவர்களை இரவு நேரங்களில் வீட்டில் தூங்க வைப்பதில் தாய்மார்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையிலும் குறிப்பிட்ட சில இடங்களில் அதிக வெப்பம் நிலவி வருகின்ற போதிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment