மஹியங்கனை: மஹியங்கனைப் பள்ளிவாசல் மீது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்கதலுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு இது தொடர்பான அவசர கடிதம் ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்க மேலாக மஹியங்கனை அரபாப் பள்ளிவாசல் இயங்கிவருகிறது. மேலும் 5 நேரத் தொழுகையும் மிக அமைதியாக யாருக்கும் இடையூறு இல்லாத வகையிலும் இடம்பெற்று வருகிறது. அப்படிப்பட்ட அப்பள்ளிவாயலையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் இப் புனிதமான றமழான் மாதத்தில் தாக்கியதோடு மட்டுமல்லாது இஸ்லாத்தில் அறுவறுக்கப்பட்ட பன்றியின் இரத்தமும் சிந்தச் செய்யப்பட்டுள்ளமையினையும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இனங்களுக்கிடையில் முறுகளை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் ஒரு இன முறுகளை ஏற்படுத்தும் இந்த சக்திகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சட்ட நடவடிக்கையினை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றையும் பிரதியமைச்சர் நேற்று அனுப்பிவைத்துள்ளார்.
தொடராக இவ்வாறான தாக்குதல் இடம்பெறும் வேளையில் இராணுவத்தினரோ பொலிசாரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கவலையளிப்பதாக தெரிவித்த பிரதியமைச்சர் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு பல முறை தகவல் வழங்கிய போதும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பிரதியமைச்சர் தனது கவலையினை தெரிவித்தார்.
மேலும் இந் நாசகார சக்திகள் கைது செய்யப்படாமையால் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதாகவும் உடனடியாக இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் இனிமேலும் காவலத்துறையினர் கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட கடிதம் ஒன்றினையும் பாதுகாப்பமைச்சுக்கு பிரதியமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

Leave a comment