ஒஸாமாவின் அந்த இறுதி இராத்திரி….

ht_amal_ahmed_bin_laden_wife_jp_110504_wg[1]டோஹா: பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரும், விடை தெரியாத பல கேள்விகளும் மர்மங்களும் உள்ள நிலையில், நேற்று லீக் செய்யப்பட்ட ஒரு ரிப்போர்ட்டில் சில விஷயங்கள் உள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ரிப்போர்ட்டை நேற்று லீக் செய்தது, அல்-ஜசீரா.

பின்லேடன் பாகிஸ்தானில் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட அமெரிக்கா, அதிரடி சீல் டீம் ஒன்றை அனுப்பி, பின்லேடனை சுட்டுக் கொன்று, அவரது உடலையும் கொண்டு சென்றது. ஆனால், பின்லேடனின் மனைவிமார்கள், அவருக்கு உதவியவர்கள், என பலரை தமது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, பல விபரங்களை தெரிந்து கொண்டது பாகிஸ்தான் அரசு.

பாகிஸ்தான் அரசு தெரிந்துகொண்ட விபரங்களை கொண்டு, ரகசிய ரிப்போர்ட் ஒன்று தயாரிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ரகசியமாக வைத்திருந்த அந்த ரிப்போர்ட்டின் ஒரு பிரதி எப்படியோ அல்-ஜசீரா டி.வி. சனலின் கைகளில் கிடைத்துவிட, அதிலுள்ள சில விபரங்களை நேற்று லீக் செய்தது அல்-ஜசீரா.

பின்லேடனின் மனைவிகள் உட்பட அவருடன் தொடர்புடைய 200 பேரை விசாரித்து தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட்டில் உள்ள, சுவாரசியமான சில விஷயங்களை பார்க்கலாம்.

2001-ம் ஆண்டு செப்-11 தாக்குதலின்பின், ஆப்கான்மீது படையெடுத்து கைப்பற்றிய அமெரிக்கா, அங்கு ஆண்டுக் கணக்கில் பின்லேடனை பாலைவன குகைகளில் தேடிக்கொண்டிருக்க, அவர் 2002-ம் ஆண்டு தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்குள் வந்து சேர்ந்து விட்டார்.

2002-2003ம் ஆண்டு காலப்பகுதியில் ஒருதடவை பாகிஸ்தான் பொலீஸிடம் சிக்கிக்கொள்ள இருந்தார் பின்லேடன்.

ஒரு நாள் மார்க்கெட் ஒன்றுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார் பின்லேடன். காரில் அவருடன் அவருடைய மெய்ப்பாதுகாவலர் இப்ராஹிம் அல்-குவைத்தியும், இப்ராஹிம்மின் மனைவி மர்யாமும் இருந்தனர். கார் ஓவர் ஸ்பீடில் செல்லவே, பாகிஸ்தான் ட்ரபிக் பொலீஸ் காரை மறித்துவிட்டது.

பின்லேடனை யார் என்று தெரியாத ட்ராபிக் பொலீஸாருக்கு, கொடுக்க வேண்டியதை கொடுத்து ‘செட்டில்’ செய்துவிட்டு, உடனே கிளம்பிச் சென்றுவிட்டார் பின்லேடன் என்ற தகவலை விசாரணையில், இப்ராஹிம்மின் மனைவி மர்யாம் கூறியுள்ளார்.

விசாரணையில் கிடைத்த மற்றொரு தகவலின்படி, பின் லேடன் தனது வீட்டு காம்பவுண்டுக்குள் நடமாடியபோது, கௌபாய் தொப்பி அணிந்து கொள்வாராம். உளவு விமானங்கள் படம் பிடித்தாலும் முகம் தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடு.

மற்றொரு தகவல், பின்லேடன் தங்கியிருந்த இரண்டு மாடி வீட்டின் மேல் பாதுகாப்பு காரணங்களுக்காக 3-வது மாடி ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால், 2005-ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்பின், உயரமான பில்டிங்கை கட்டும் திட்டத்தை கைவிட்டுவிட்டார்.

பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க அதிரடிப்படை ஆபரேஷன் எப்படி நடந்தது? அந்த இரவில் பின்லேடன் வீட்டில் தங்கியிருந்த அவரது மனைவிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இந்த ரிப்போர்ட்டில் உள்ளன.

அன்றைய தினம் இரவு, உணவு உண்டு தொழுகையும் முடிந்தபின், தமது இளைய மனைவி அமாலின் அறைக்குள் சென்று தங்கினார் பின்லேடன். நள்ளிரவு கடந்து சற்று நேரத்தில் இருவரும் புயல் அடிப்பது போன்ற ஓசை கேட்டு திடுக்குற்று எழுந்தனர்.

வந்தது புயல் அல்ல. அமெரிக்க சீல் அதிரடிப் படையின் 1-வது ஹெலிகாப்டர்.

அந்தக் கணத்தில் இருந்து 10 நிமிடத்துக்குள், வீட்டின் 2-வது மாடியில் இருந்த அமாலின் ரூமில், பின்லேடன் தரையில் பிணமாக கிடந்தார்.

அமெரிக்க சீல் அதிரடிப்படை ஆபரேஷனை நேரில் பார்த்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் கூறிய தகவல்களின்படி, அமெரிக்க அதிரடிப்படையினர் அந்த அறைக்குள் புகுந்தபோது, பின்லேடனின் கைகளில் ஆயுதம் ஏதும் கிடையாது.

தூக்கத்தால் அப்போதுதான் எழுந்திருந்த அவர், தம்மை சுட வந்தவர்களை எதிர்க்கக்கூட முடியாத நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டார். மிக வேகமாக நடந்த அந்த தாக்குதலின்போது பின்லேடன் தனது மனைவியையோ, குழந்தைகளையோ கேடயமாக பயன்படுத்தி தப்ப முயற்சிக்கவில்லை.

மொத்த ஆபரேஷனுக்குமே அமெரிக்க அதிரடிப் படையினரால் பயன்படத்தப்பட்டவை, சுமார் 30 துப்பாக்கி தோட்டாக்கள்தான். எல்லாமே 36 முதல் 38 நிமிடங்களில் முடிந்து விட்டன.

பின்லேடன் சுடப்பட்ட நேரத்தில், அமெரிக்க அதிரடிப் படையின் அனைத்து ஹெலிகாப்டர்களும், அங்கு தரையிறங்கி இருக்கவில்லை. ஒரு சினூக் ரக ஹெலிகாப்டரும், மற்றொரு பிளாக் ஹோக் ரக ஹெலிகாப்டரும், பின்லேடனின் வீடு இருந்த இடத்தை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

பின்லேடன் கொல்லப்பட்டு, அங்கிருந்த சில கம்ப்யூட்டர்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் தகவல் கொடுக்கப்படவே, அந்த ஹெலிகாப்டர்கள் பின்லேடன் விட்டு கம்பவுண்டுக்குள் தரையிறங்கி, அதிரடிப் படையினரையும், பின்லேடன் உடலையும் ஏற்றிச் சென்றன.

Published by

Leave a comment