சாய்ந்தமருது: பொதுபலசேனவிற்கு நோர்வே ஒருபோதும் உதவவில்லை அதேபோல எதிர்காலங்களில் உதவப்போவதுமில்லை. நாம் எப்போதும் உலக சமாதானத்திற்காகச் செயற்பட்டுவருகிறோம் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தை நாமறிந்தோம். அதன்போது எமது நாடு வகித்த வகிபாகத்தை உலகறியும். எனவே நாம் எப்போதும் சமாதானத்தின்பால் செயற்படுகின்றவர்களுக்கே உதவிசெய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைக்கான பேரவையின் அம்பாறை மாவட்ட குழுவினரைச் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பு, சாய்ந்தமருதிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
தூதுவருடன் அபிவிருத்திக்கான சிரேஸ்ட ஆலோசகர் வித்யா பெரேராவும் சமுகமளித்திருந்தார். இந்த சந்திப்பின் போது சமகால விடயங்கள் பற்றி விரிவாக ஒருமணிநேரம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஆப்கானிஸ்தான்,பலஸ்தீனம், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் பல வருடங்கள் தூதுவராகப் பணியாற்றியுள்ளேன். எல்லா நாடுகளிலும் சமாதானத்திற்காகவே பாடுபட்டுள்ளோம்.இலங்கையிலும் அப்படியே பாடுபட்டோம் என்றார்.
நிலைமை அப்படியிருக்க சில ஊடகங்கள் நாம் பொதுபலசேனாவிற்கு உதவுவதாகவும் சமாதான விரோதிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் பிழையாக எழுதிவருகின்றனர். அது தவறு . எமக்கு அது கவலையளிக்கிறது.
சமயத்தலைவர்கள் என்றும் எனது விருப்பத்திற்குரியவர்கள். அவர்களால் சமாதானத்தைக் கொணரமுடியும். உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.
சமுகத்தில் உங்களது வகிபாகம் மிகவும் முக்கியமானது. நாம் சாதி சமயம் பார்ப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திப்பில் பேரவையின் உயர்பீட உறுப்பினர்களான வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் டாக்டர் எ.எல்.பாறூக் எம்.ஜ.இப்றாகிம் பாஸ்ரர் கிருபைராஜா பாஸ்ரர் கிறிஸ்தோபர் மௌலவி அன்சார் மௌலானா எம்.ஜ.ஹிமாயத்துல்லா ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறினர்.
பேரவைச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா நன்றியுரையாற்றினார். நோன்பிற்கு மரியாதை கொடுக்குமுகமாக அவருக்களிக்கப்பட்ட உபசாரத்தை கண்ணியமாக ஏற்கமறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். Jpc
Leave a comment