அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காக தான் மேற்கொண்ட பயணத்தை காரணமாகப் பயன்படுத்தி மோசடியான முறையில் நகரசபைப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நகரசபை உறுப்பினர்களின் உன்னிப்பான அவதானிப்பினாலும், பலத்த ஆட்சேபனையாலும் தடுக்கப்பட்டது.
கடந்த 2013.06.27ம் திகதி நடைபெற்ற காத்தான்குடி நகரசபையின் 42வது சபை அமர்வின்போது இடம்பெற்ற இச்சம்பவம் பற்றிய விவரமாவது:
காத்தான்குடி நகரசபையின் 40வது அமர்வு இடம்பெற்றபோது, தவிசாளர் தான் ஜேர்மனியில் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்குச் செல்லவுள்ளதாகவும், ஏற்கனவே சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய தான் திரும்பி வரும் வரையில் பதில் நகர முதல்வராக உதவித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் செயற்படுவார் என்றும் சபையில் தெரிவித்திருந்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்திருந்தனர்.
அவ்வாறு தவிசாளர் அவரது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பிறகு சென்ற 27ம் திகதி நடைபெற்ற 42வது சபை அமர்வில் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த 40வது சபை அமர்வுக்கான கூட்டறிக்கையில், 2103/46வது தீர்மானமாக இடம்பெற்றிருந்த இந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பான தீர்மானத்தில் பயணத்திற்கான செலவீனத்தையும் நகரசபை நிதியிலிருந்து தவிசாளருக்கு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி மற்றும் எம்.எச்.எம். நஸீர் ஆகிய இருவரும் இக்கொடுப்பனவு ஒன்றை வழங்குவதாக குறித்த 40வது சபை அமர்வில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதனை ஆட்சேபித்தனர்.
இதன்போது கருத்துரைத்த நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர், ஏற்கனவே சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஸியாத் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதற்காக இவ்வாறு பயணக் கொடுப்பனவை வழங்குமாறு கோரியிருந்ததாகத் தெரிவித்து அதற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நகரசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி, அவ்வாறு அவர் கோரியிருந்த போதிலும் அக்கொடுப்பனவை வழங்கலாமா என்பதை சுற்றறிக்கையைப் பார்வையிட்ட பின்னரே சபையில் அனுமதிக்க முடியும் எனத் தீர்மானித்ததாகச் சுட்டிக்காட்டினார்.
எனினும், பின்னர் அது தொடர்பான சுற்றறிக்கை எதுவும் சபையில் சமர்ப்பிக்கப்படவுமில்லை. உறுப்பினர் ஸியாத் கோரியிருந்தவாறு கொடுப்பனவு எதுவும் அவருக்கு வழங்கப்படவுமில்லை.
இந்நிலையிலேயே தவிசாளரின் ஜேர்மன் பயணத்திற்கான கொடுப்பனவை வழங்குவதாக 40வது சபை அமர்வில் மேற்படி இலக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
40வது சபை அமர்வில் எடுக்கப்பட்டிராத தீர்மானமொன்றை, எடுக்கப்பட்ட தீர்மானத்திற்குள் தந்திரமான முறையில் உட்புகுத்தி பெருந்தொகையான சபை நிதியினைப் பெறுவதற்கு முயற்சி செய்த தவிசாளரினதும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களினதும் இத்திட்டமிட்ட முயற்சி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களின் தீவிர அவதானிப்பினால் சபையில் ஆட்சேபிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.
எனினும் ஊடகவியலாளர் ஒருவரும் இச்சபை அமர்வை அவதானிக்கவென அழைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்விவகாரத்தை மேலும் விவாதித்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க விரும்பிய ஆளுந்தரப்பினர், இக்கொடுப்பனவு தொடர்பான விடயம் இச்சபையில் உண்மையில் பேசப்படாத விடயம் என்பதை ஏற்றுக் கொண்டு மேற்படி இலக்கத் தீர்மானத்தில் அது தொடர்பான தீர்மான வாசகத்தை இரத்துச் செய்வதாக ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை அங்கீகரிக்கலாம் என்ற உடன்பாட்டிற்கு வந்ததையடுத்து அத்தீர்மானத்தை சபையோர் ஏகமனதாக அங்கீகரித்தனர்.
இந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பிறிதொரு உள்ளுராட்சி சபைத் தலைவருடன் எமது இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்பு கொண்டு பயணச் செலவினங்கள் பற்றி வினவியபோதுஇ தம்மை இக்கருத்தரங்கிற்கு அழைத்துச் சென்ற நிறுவனம் எமது கைச் செலவுக்காக 1100 அமெரிக்க டொலர்களை வழங்கி இருந்ததாகவும், ஏனைய தங்குமிடம், உணவு மற்றும் பிரயாண ஏற்பாடுகளையும் நல்ல முறையில் ஏற்படுத்தித் தந்ததாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு அனைத்து வசதிகளுடனும் இந்த வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பிய பின்னரும் சபை நிதியில் இருந்து பெருந்தொகையொன்றை பயணச் செலவினம் என்ற போர்வையில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் பெற முயற்சித்தது அப்பட்டமான மோசடி முயற்சியாகும்.
மாத்திரமன்றி சபையில் எடுக்கப்பட்டிராத தீர்மானமொன்றை மோசடியாகவும், தந்திரமாகவும் உட்புகுத்தியது சபை உறுப்பினர்களை பிழையாக வழி நடாத்த முயற்சித்த அதிகார துஷ்பிரயோக செயலுமாகும்.
இது போன்று கடந்த காலத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நகரசபை நிதியினை மோசடியாகப் பயன்படுத்திக் கொண்ட பல சம்பவங்களை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுட்டிக் காட்டியிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.
தவிசாளரின் இந்த நிதி மோசடி முயற்சி தொடர்பாக நடவடிக்கை விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கோரிக்கைகளை அனுப்பவிருக்கிறது.
Leave a reply to Mr-avathaani Cancel reply