புத்தகயா: பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை 9 குண்டுகள் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை மொத்தம் 9 குண்டுகள் வெடித்தன.
முதல் குண்டு அதிகாலை 5.30 மணிக்கு வெடித்தது. 3 குண்டுகள் துர்கீ மடத்திற்கு வெளியே வெடித்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். கோவிலுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் சம்பவ இடத்திற்கு கிளம்பியுள்ளார்.
இது தீவிரவாத தாக்குதல் தான் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாபோதி கோவில் புத்த மதத்தினரின் புனிதத் தலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலுக்கு இலங்கை, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.


Leave a comment