பெங்களூர்: பெங்களூரில், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறுதலாக வேறு பிரிவு இரத்தத்தை ஏற்றியதால் பரிதாபமாக அவர் பலியானார். மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது ராஜேஸ்வரி, கடந்த 4 ஆண்டுகளாக இரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால், இவருக்கு அடிக்கடி இரத்தம் ஏற்றப்படுவது வழக்கம்.
சம்பவத்தன்று வழக்கம்போல் இரத்தம் ஏற்றிக் கொள்வதற்காக ‘கே.சி’ அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரியை அழைத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். ராஜேஸ்வரிக்கு இரத்தம் ஏற்றப் பட்டுள்ளது. ஆனால், இரத்தம் ஏறும்போது இரத்தப் பாட்டிலை எதேச்சையாக பார்த்த ராஜேஸ்வரியின் உறவினர் ஒருவர் அதிர்ந்து விட்டார்.
காரணம் ரத்தப் போத்தலில் பி+ எனப் போடப் பட்டிருந்தது. ஆனால், ராஜேஸ்வரியின் இரத்தப் பிரிவோ ஓ+. தாதியை அழைத்து விளக்கம் கேட்ட போது அவரோ கணக்கில் எடுக்காமல், போத்தலில் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டப் பட்டிருப்பதாகவும், எல்லாம் சரியாகத்தான் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் இரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ராஜேஸ்வரியின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கு என ராஜேஸ்வரியின் நிலைமை ஆபத்தானதும் பயந்து போன அவரது உறவினர்கள் அவரை உடனடியாக் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக பலியானார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மல்லேஸ்வரம் பகுதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வைத்தியர் சுரேஷ் , தாதி பாக்யலட்சுமி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![bloodpotion[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/bloodpotion1.jpg?w=70&h=120)
Leave a comment