கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி, வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடைசியாக 1988-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர்களினால் மாகாணசபை நிர்வாகம் நடத்தப்பட்டுவந்தது. 2006-ம் ஆண்டில் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன்படி வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டன.
அதன்பின்னர், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கு மாகாணசபையின் இரண்டாவது தவணை ஆட்சிக்காலம் இப்போது நடக்கிறது.
உள்நாட்டு போர் 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில், வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
ஆனாலும் தேர்தல் சொன்னபடி நடக்குமா என்பது கேள்விக்குறியே என்று பல தரப்பிலும் சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.
வடக்குத் தேர்தல் தொடர்பில் தனக்கு அதிகாரபூரவமாக அறிவித்தல் வரவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளரும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BBc
Leave a comment