இ.போ.ச காத்தான்குடி பஸ் டிப்போவை தற்காலிகமாக ஏறாவூர் டிப்போவுடன் இணைக்கத் தீர்மானம்- ஸ்ரீ .சு.க மட்டு அமைப்பாளர் ரஊப் ஏ மஜீத்

RAUFF– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலையின் நிருவாக நடவடிக்கைகளை இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் சாலையுடன் தற்காலிகமாக இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரஊப் ஏ மஜீத் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக காத்தான்குடிச் சாலையில் நிர்வாக நடவடிக்கைகளில் காணப்பட்டு வரும் அசமந்த நிலை சம்பந்தமாக இன்று வியாழக்கிழமை இலங்கைப் போக்குவரத்துச் சபை கொழும்பு தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 ஏற்கனவே  இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலையின் முகாமையாளராக கடமையாற்றிய மர்ஹும் ஏ.எல்.பழுளுல்லாஹ் மரணமாகியதையடுத்து நிர்வாக நடவடிக்கைகளில் பல்வேறு அசமந்தப் போக்குகள் காணப்பட்டன.

அது மட்டுமல்லாமல் இலாபத்திலும் குறைபாடுகள் ஏற்படத் தொடங்கின.

அதற்குப்பின் தொடர்ந்து சுமார் 03மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.அண்மையில்தான் ஒரு மாதத்திற்குரிய சம்பளம் வழங்கப்பட்டது.

இவற்றைக் கருத்திற் கொண்டே குறித்த டிப்போ மீள வழமை போன்று கட்டியெழுப்பப்படும் வரை ஏறாவூர் சாலையுடன் தற்காலிகமாக இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சசி வெல்கம,இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் எம்.நஸீர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரஊப் ஏ மஜீத் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment