காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்இபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதியின் நடுவே 61 பேரித்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள சில பேரித்த மரங்களில் பேரித்தம் பழங்கள் காய்த்துப் பழமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு வருகைதந்து காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள இவ்வருடத்தில் அருவடைக்கு தயாரான பேரித்த மரங்களின் சில பழங்களை தனது கையால் பறித்து சுவைத்தார்.
அத்தோடு வடக்கு மாகாணத்திலும் இதே போன்று பேரித்த மரங்களை நடுவதற்கான ஆலோசனைகளையும் அமைச்சர் டக்ளஸ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்த அமைச்சின் தேசிய இணைப்பாளர் கே.தங்கேஸ்வரி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அந்தரங்கச் செயலாளர் நாஸர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment