அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் திண்மக்கழிவு முகாமைத்துவ கடமைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இரு நியமனதாரர்களை இடைநிறுத்துமாறு பணிக்கப்பட்ட கட்டளையானது, அம்பாரை மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களின் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மீண்டும் அடிமட்ட நிலைக்குச் செல்கின்ற ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு தவிசாளர் எம்.ஏ. அன்சில் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில், யூ.எல். மப்றூக் என்பவர் கௌரவ ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட வருமான சேகரிப்பாளர், பொதுமக்கள் தொடர்பு உத்தியோகத்தர் ஆகிய நியமனங்கள் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டதாகவும், குறித்த நியமனங்களை உடன் இரத்துச் செய்யுமாறும் எமது சபையின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளீர்கள்.
கடந்த ஆறரை வருடங்களாக யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடனும், வழிகாட்டுதலுடனும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் சிறப்பானதொரு நிலையை அடைந்திருக்கிறது.
இவ்வடைவுகளை எய்துவதற்கு ஏதுவாக, உள்ளூராட்சி நிறுவனங்களுடன் யுனொப்ஸ் நிறுவனம் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் உள்ளூராட்சி மன்றங்களினால் சம்பளம் வழங்கிவரும் செயற்பாடானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது என்பதனை, இவ்விடயம் தொடர்பான பல கூட்டங்களில் தாங்களும் கலந்துகொண்டவர் என்ற அடிப்படையிலும், இவ்விடயம் தொடர்பான பல்வேறுபட்ட விடயப் பரிமாற்றங்கள் தொடர்பில் அறிந்தவர் என்ற அடிப்படையிலும் தாங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் எனதிடமாக நான் நம்புகிறேன்.
அதேவேளை, கொத்தணி அடிப்படையிலான திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டுக்கான உடன்படிக்கையில் இறுதியாக நான் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் கௌரவ முதலமைச்சர் உட்பட தாங்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தீர்கள். இவ்வாறு அனைத்து விடயங்களையும் தாங்கள் அறிந்திருந்தபோதிலும்கூட கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இந்நியமனங்கள் நியமன விதிமுறைகளுக்கு மாற்றமாக வழங்கப்பட்டமைபற்றி எவ்வித விளக்கம் கோரலையும் தாங்கள் செய்திருக்கவில்லை.
அத்தோடு யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பு முடிவுற்றதன் பின்னரான காலத்திற்கு இந்நியமனங்களை நீடிப்பது தொடர்பாக கடந்த 19.06.2013 அன்று அமைச்சின் செயலாளரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமாதகாலத்திற்குள்ளாக முடிவினை அறிவிப்பதாகக் கூறியிருந்தீர்கள். ஆக, யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனங்களுக்கு தங்களின் எழுத்துமூல அனுமதி இல்லாவிட்டாலும் கூட மறைமுகமான அனுமதி காணப்பட்டதனை எனக்கு ஊகிக்கக்கூடியதாக இருந்தது.
எமதலுவலகத்தில் கடந்த ஆறரை வருடகாலமாக இப்பணியில் 25 தொழிலாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கான அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தும்கூட, அதற்கான எவ்வித பதிலும் தங்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை. தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட மேற்படி கடிதத்தில் வருமான சேகரிப்பாளர் மற்றும் பொதுசன தகவல் உத்தியோகத்தர் ஆகிய நியமனங்களுக்கு அனுமதி பெறப்படாமையால், இப்பதவிக்குத் தெரிவானவர்களை உடன் இடைநிறுத்தும்படி பணித்துள்ளீர்கள். இவர்கள் இருவர் மாத்திரமல்ல எமதலுவலகத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ கடமைகளை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த 25 ஊளியர்களின் நியமனங்களையும், அம்பாரை மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களிலும் இக்கடமையில் ஈடுபடும் ஊழியர்களின் நியமனங்களையும் இடைநிறுத்த வேண்டிய மறைமுகமான உத்தரவாகவும் அவ்வுத்தரவைக் கொள்ளமுடியும் என்ற அடிப்படையில் அனைத்து நியமனங்ளும் நிறுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதனை தாங்களும் விளங்கிக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதுமட்டுமன்றி, தங்களின் உத்தரவினால் எமது வருமான சேகரிப்பும் தற்போது தடைப்பட்டுள்ளதனையும் தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எமது நிர்வாகத்தின் கீழுள்ள திண்மக்கழிவு நிலநிரப்புகை நிலையத்தில் கடமைபுரியும் ஊழியர்களை இடைநிறுத்துவதன் மூலம் அட்டாளைச்சேனை, கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சிமன்ற எல்லைக்குள் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முகாமை செய்யமுடியாத நிலையேட்படும்.
தங்களால் இடைநிறுத்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள இருவருள் ஒருவரும், முறைப்பாட்டாளரான யூ.எல். மப்றூக் என்பவரும் அச்சு இலத்திரனியல் ஊடகத்துறையுடன் தொடர்புபட்டவர்கள். ஏற்கனவே, இவர்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே இம்முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற நியாயமான ஊகங்கள் இருக்கின்ற வேளையில், மிகுந்த பிரயர்த்தனங்களுக்கு மத்தியில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை ஒருதரமான நிலைக்குக் கொண்டுவர யுனொப்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இச்செயற்றிட்டமானது, தங்களது இடைநிறுத்தக் கட்டளைப் பிரகாரம் மீண்டும் அடிமட்ட நிலைக்குச் செல்கின்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எனவே, மிகக்கூடிய விரைவில் எமது வேண்டுதல்களை ஏற்று அனுமதி வழங்குவதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வழியேற்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![New%20message[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/new20message1.png?w=90&h=90)
Leave a comment