மூதூர் தளவைத்தியசாலையில் பேரணி

DSC01663– பஹ்மியூஸூப்

மூதூர்:  மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரிக்கை விடுத்து 02.07.2013 செவ்வாய்க்கிழமை மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தளவைத்தியசாலை வரை சென்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வைத்திய சாலைக்குத் தேவையான ஆளணியினரை பெற்றுத் தருமாறும் போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

மிகப்பழமையான இவ்வைத்திய சாலை 2006ஆம் ஆண்டு முதல் தளவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டபோதும் போதிய வசதிகள் எதுவும்இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. பேரணியை ஏற்பாடுசெய்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் கருத்து தெரிவித்த போது, இவ்வைத்தியசாலையானது தளவைத்தியசாலையாக இருப்பதனால் மூதூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி ஈச்சிலம் பற்று, சேருவில பிரதேசங்களையும் உள்ளடக்கி சுமார் ஒரு இலட்சம் பேர்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும்   ஆனால் குறைந்தளவான ஆளணியினரும் பௌதீக வளப்பற்றாக்குறையும்  மக்களுக்கு போதிய வைத்திய சேவையை வழங்குவதற்குத் பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

அவர் அங்கு  மேலும் தெரிவித்ததாவது,

நாளொன்றுக்கு வெளி நோயாளர் பிரிவிற்கு மட்டும் 400 ற்கும் அதிகமான நோயாளர்கள் வருவதாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஓரிருவரே கடமையில் இருக்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் பெருந்தொகையாக வந்து குவிகின்ற நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாககின்றர்.

சில காலமாக இயங்கி வந்த சத்திர சிகிச்சை கூடம் ஆளணி பற்றாக்குறையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவும் போதிய வசதிகள் இன்றியே இயங்கி வருகின்றது.கதிரியக்க கூடமும் முறையாக இயங்க முடியவில்லை. கிளினிக் வரும் நோயாளர்கள் அமர்ந்திருப்பதற்கு போதிய இடமில்லாது அங்குமிங்கும் குந்திக்கொண்டு இருக்கும் நிலையே இருக்கின்றது. வைத்தியர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் முறையான விடுதி வசதிகூட இவ்வைத்தியசாலையில் இல்லை. அவர்கள் பெரும் தியாத்தோடுதான் இங்கு தங்கியிருந்து சேவையாற்றுகின்றனர்.

எனவே, இவ்வைத்தியசாலையில் வைத்திய விதிகள், நோயாளர் விடுதிகள்,மருந்துக் களஞ்சியம், கதிர் இயக்க கூடம், இரத்த வங்கி, ஆய்வு கூடம் முதலானவை முறையாக அமைக்கப்படவேண்டும். பற்றாக்குறையாக  இருந்து வருகின்ற அத்தியவசிய உபகரணங்களும் போதிய ஆளணியினரும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் இவ்வைத்தியசாலையினால் சிறந்த சேவையை வழங்கமுடியும் என்றார். பேரணி முடிவின் போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கென மகஜர் ஒன்று மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

DSC01669

DSC01718

DSC01663

Published by

Leave a comment