மட்டக்களப்பில் இடம்பிடிக்கும் புத்தர் சிலைகள்..

IMG_0371ஓட்டமாவடி: வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே இந்த பத்தர் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திச் சங்கத்தினர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.

IMG_0371

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தர் சிலைகளை நிறுவுவது விடயத்தில் சிலர் பாரிய அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது இம்மாவட்டத்தில் புத்தர் சிலைகளை சந்திக்கு சந்தியிலும், முக்கிய இடங்களிலும் நிறுவுவதற்கு முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment