கொழும்பு: கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றி வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் மீண்டும் கோரினார்கள்.அபிவிருத் திட்டங்கள் பலவற்றுக்கு முதலமைச்சர் தடையாக இருப்பதாகவும் கூட்டங்கள் உரிய முறையில் நடத்தப்படுவதில்லையெனவும் அரச தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
இது தொடர்பாக கூடிய விரைவில் முடிவு எடுக்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியதும் கிழக்கு மாகாணசபை தொடர்பாக முடிவெடுப்பாரென ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் கூறினார்.இதேவேளை கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் கங்கிரஸ் உறுப்பினர்கள் காரணமல்லவென அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி குறிப்பிட்டார்.
மாகாணசபையின் அதிகாரங்களை தக்க வைப்பது மற்றும் சிங்கள கடும்போக்கு அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக கூறிய ஹசன் அலி, கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான காலம் ஏற்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்கும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் தங்களது அபிமானத்திற்குரியவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியை கேட்டுவருவதும் இங்கு அவதானிக்கத்தக்கது.
Leave a comment