
பழுளுல்லாஹ் பர்ஹான்
கிரான்: கோறளைப்பற்று தெற்கு-கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோங்களை மற்றும் பொத்தானை கண்டங்களுக்கான நீர் பாய்ச்சும் நடவடிக்கைக்காக நீர்ப்பாசன அதிகாரிகாரிகளின் அனுமதியுடன் சென்ற தமிழ் விவசாயிகளை ஒரு குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்களின் காலில் வீழ்ந்து கெஞ்சி உயிர் பிழைத்ததாக தாக்கப்பட்ட வட்ட விதானையான சுக்குறு சாமித்தம்பி தெரிவித்தார்.
தாக்கப்பட்டவர்கள் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பார்வையிட்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ. பிரசாந்தன் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு வினவியதுடன் தாக்கியவர்களில் மூவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளை இச் சம்பவத்தை ஓர் இன முறுகலாக்குவதற்கு சில அரசியல்வாதிகள் முயல்வதாகவும் அதற்கு எமது மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்வர்களுக்கான உரிய சிகிச்சை மற்றும் தாக்கியவர்களுக்குரிய தண்டனை தொடர்பிலும் தாம் பொலிசாருடன் கலந்துரையாடி தீர்வு பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் தமிழ் விவசாயிகளின் பெயர் விபரம் வருமாறு:-
சுப்பிரமணியம் கருணாகரன் (39) சித்தாண்டி, சிவப்பிரகாசம்மயில்வாகனம் (43) மாவடிவேம்பு 02, சாமித்தம்பி துரைராஜா (42), சந்திவெளி, வேலாயுதம் சிவசாரசா (43) சந்திவெளி, சுக்குறு சாமித்தம்பி (63) வட்டவிதானை சந்திவெளி.
இதேவேளை த. தே. கூட்ட்மைப்பு உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment