லண்டன்: இலங்கை எழுத்தறிவு உள்ளவர்களின் வீதத்தில் மிகவும் உச்சத்தில் இருக்கின்ற போதிலும், அங்கு சில பகுதிகளில், இன்னமும் ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கல்வியை பாதியில் கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் யுனிசெஃப் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஏனைய நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களை விட மலையக தோட்டப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளே அதிகமாக தமது கல்வியை ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கைவிடுவதாக தெரியவந்துள்ளது.
பள்ளியைக் கைவிடும் சிறார்களைப் பொறுத்தவரை அவர்களது ”பால்” இந்த விடயத்தில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தவில்லையாயினும், மலையக தோட்டங்களில் ஆண் பிள்ளைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே தமது கல்வியை கைவிடுவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
அத்துடன் வறிய பிள்ளைகளே அதிகமாக தமது படிப்பை பாதியில் கைவிடுவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சமூக பொருளாதாரக் காரணங்களே பல சந்தர்ப்பங்களில் 5-15 வயது வரையிலான பிள்ளைகள் கணிசமான அளவில் பள்ளிக்கூடக் கல்வியை பாதியில் கைவிடுவதற்கான காரணமாக இருப்பதாகவும் யுனிசெஃப்பின் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
சிறுபிள்ளைகள் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுதல், தாயார் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போதல் ஆகியவையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கின்றது.
பள்ளிவசதிகள் இல்லாமை, பள்ளிக்கூட உட்கட்டமைப்பு சரியாக இல்லாமை, ஆசிரியர்கள் வசதியீனம், வலது குறைந்த பிள்ளைகளுக்கான ஏற்பாடுகள் போதாமை ஆகியனவும் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தை பாதியிலேயே விட்டு வெளியேறக் காரணமாகின்றது.
பெற்றோரின் போக்கு, அரசியல் அர்ப்பணிப்பு இன்மை, கல்வி முறைமை அரசியல் மயமாக்கப்படுதல், கல்வி விநியோகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமை ஆகியவையும் இந்த விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
92.3 வீதம் கல்வியறிவைக் கொண்ட இலங்கையில் அதனை 100 வீதமாக மாற்றுவதே தமது இலக்கு என்று கூறியுள்ள இலங்கையின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், வறுமை, பெற்றோர்களின் கல்வி அறிவீனம், தூர இடங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்திருத்தல், பிள்ளைகளில் காணப்படும் பலவிதமான உடற் குறைபாடுகள் பள்ளிகளை விட்டு குழந்தைகள் பாதியில் வெளியேறுவதற்கான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த விடயத்தில் ஆசிரியர்கள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும் என்று கூறியுள்ள அவர், அவர்களுக்கு மேலதிக பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
BBC
Leave a comment