காத்தான்குடி: புதிய காத்தான்குடி அல் அமீன் மஹா வித்தியாலத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் அல் அமீன் வீதியில் வடிகாண்களின் மேல் போடப்பட்டிருக்கும் கொங்கிரீட் தட்டங்களில் ஒன்று சுமார் 3 மாதங்களாக உடைந்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலைக்குச் செல்லும் சில மாணவர்களும் மற்றும் இரவு வேளையில் இதனூடாக செல்லும் சில பாதசாரிகளும் கால் தவறி விழுந்து காயப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
அதுமாத்திரமன்றி, இவ்வீதி வடிகாணின் மேல் போடப்பட்டிருக்கும் இத்தகைய கொங்கிரீட் தட்டுக்களில் பல இன்னும் உடைந்து, வெடித்து, சேதமடைந்து வருகின்ற நிலை ஆங்காங்கே காணப்படுகிறது. இவைகளும் விரைவில் உடைந்து எப்போது விழும் என்ற நிலையில் காணப்படுகின்றன.
கம்பிகளும், கொங்கிரீட் கலவையும் உடைந்த இத்தட்டங்களில் காணப்படுவதால், பாரிய காயங்களையும், ஆபத்துக்களையும் இலகுவில் ஏற்படுத்தி வருவதாகவும், உடனடியாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் இவ்விடயத்தைக் கவனத்திலெடுத்து, அதற்கான வழிமுறைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இப்பகுதி பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a comment