ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13ஆம் திருத்தச்சட்டத்தின் ஒரு குழந்தை – அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

பழுளுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர்களிடம் அவர்களது அமைச்சோடும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோடும் சம்பந்தப்பட்ட சட்டங்களை அங்கு கொண்டுவருமாறு கூறியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து அது தொடர்பில் ஆளுநரின் அணுகு முறை எவ்வாறு இருக்கப்போகிறது என்பதையும் பார்ப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் ஊடாக எந்தப் பிராந்தியங்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்க வேண்டுமென்ற நோக்கங்களில் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு அப்பால் ஏனைய மாகாணங்கள் தான் அதன் பயனை அனுபவித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம்  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இன்று நாட்டில் சூடுபிடித்துள்ள ஒரு செய்திதான் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி. இது பற்றி நிறையப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் 13 ஆம் திருத்தத்தின் ஒரு குழந்தை என்றால் அது மிகையாகாது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவுதான் 13ஆம் திருத்தச்சட்டமாகும். அடுத்தது ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாகாண சபை முறைமை என்பது முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு வித்திட்ட ஆரம்ப தேர்தல் களமாக அமைந்தது. அந்தத் தேர்தல் களத்தில் அன்று நிலவிய சூழ்நிலையில் அசல் வேட்பாளர்கள் அச்சமடைந்திருந்த காரணத்தில் நாங்கள் நகல் வேட்பாளர்களையே களமிறக்கினோம். பின்னர் எல்லோரும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாகவே இருந்தனர்.

அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றில் அமைச்சர் அதாவுல்லாஹ் தாம் வடகிழக்கு மாகாணச் சபையில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என கூறியபோது அதனை மறுத்துப் பேசுவதற்கு எனக்கு நாவு துடித்தது. ஏனென்றால் அந்த மாகாண சபை தேர்தல் பற்றி என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்றும் அவர் கூறினார். அவ்விடத்தில் அவரைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காக சும்மா விட்டுவிட்டேன். அத்தகையவர்கள் எரிகிற வீட்டில் எதையாவது பிடுங்கிக் கொள்ளப் பார்ப்பவர்கள். ஜனாதிபதி முன்னிலையில் தேவைக்கேற்றமாதிரி பேசி, புள்ளி போட்டுக்கொள்ள விரும்புபவர்களை சும்மா விட்டு விட வேண்டியதுதான். மக்கள் அதற்குத் தீர்ப்பளிப்பார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் இருப்பவர்கள் தங்களது பெயர்களை கட்டிடங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சூடி தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் அக்கரைப்பற்றிலும், காத்தான்குடியிலும், ஓட்டமாவடியிலும், வன்னியிலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற அரசியல்வாதிகள் அவ்வாறு தாராளமாக தமது பெயர்களை சூடிக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு தங்களது பெயர்களை சூடாவிட்டால் அரசியல் இருப்பே கிடையாது. இதுதான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கும் போலிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். இப்பொழுதும் கூட முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்களில் கட்டிடங்கள் போன்றவற்றிற்கு தங்களது பெயர்களைச் சூடிக்கொள்வதில் பெருமையடைகிறார்களோ அவர்கள் இந்தக் கட்சியைவிட்டுத் தாவுவதற்கு தருணம் பார்த்திருப்பவர்கள் என இலேசாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் உரிமைகளுக்காகவன்றி, அபிவிருத்திக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல. என்றாலும் ஆட்சியின் பங்காளியாக இருக்கின்ற போது அபிவிருத்தியிலும் எங்களுக்கு உரியவை கிடைக்க வேண்டும் என்பதில் கட்சிப் போராளிகள் உரிமையோடு கேட்கிறார்கள். அவர்கள் ஆத்திரமடைந்து, ஆதங்கத்துடன் அவ்வாறு எங்களிடம் கூறுகிறார்கள்.

சமூகம் பாதிக்கப்படும் பொழுது இந்த இயக்கம் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. இன்று முஸ்லிம் காங்கிரஸிற்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை மாறி, மாறி வந்து கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு காரணம் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வெற்றி அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்த கையோடு புரட்சிகரமான முடிவொன்றை மேற்கொண்டுவிட வேண்டுமென எமது கட்சியினர் துடியாய்த் துடித்தார்கள். ஆனால், அதன் பின்புலத்தில் நாம் அளித்த வியாக்கியானங்களை புரிந்துகொண்டு, எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் எங்களோடு கடும் கோபம். தமிழ் பத்திரிகைகள் கூட எங்களைப்பற்றி பத்திகளை தாராளமாக எழுதியதோடு, கேலிச் சித்திரங்களை வரைந்தன.

நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும்? அமைச்சரவையில் எங்களது நிலைப்பாட்டை இப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கூட பாராட்டுகிறார்கள்.

13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் ஏன் இவ்வாறு அவசரப்படுகிறது? ‘பிறக்கும் பொழுதே முடம். பேயக்குப் பார்த்தால் சரிவருமா?’ அது போன்றுதான் இந்த 13 ஆம் திருத்தச் சட்டமும். பிள்ளை கிடைத்துவிட்டது. அது ஊனமுற்று இருக்கிறது என்பதற்காக தூக்கியெறிந்து விடலாமா? ஜனாதிபதியின் செயலாளர் 13ஆவது திருத்தத்தை ‘வெள்ளை யானை’ என்கிறார். அவர் டுவிட்டரில் ஷெட் பண்ணுகின்ற போது பல விடயங்களை கூறுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயத்தில் ஏதோ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக இருக்கலாம். செயலாளர்கள் அரசியல் பேசுவது எனது பார்வையில் முற்றிலும் தவறாகும்.

ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த கே. எச். ஜே. விஜயதாஸ, ஒரு குறிப்புப் புத்தகத்துடன் வந்து உரிய நேரத்தில் அவர் முன்னிலையில் தோன்றுவார். பிரேமதாஸாவின் கடைக்கண் பார்வையில் அவர் பட்டதும் அருகில் அழைப்பார் மிகவும் அமைதியாக ஜனாதிபதி பிரேமதாஸ கூறுபவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார். கருத்துகள் எதையும் கூறமாட்டார். அத்தகைய பண்புதான் அவரிடம் காணப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாஸ மறைந்த பின்னர் இந்த கே.எச்.ஜே. விஜயதாஸ என்ற செயலாளர், பலவாறான கட்டுரைகளை எழுதியபோதுதான் அவர் பெருந்தேசியவாதத்தில் ஊறித் திளைத்தவர் என்பது தெரியவந்தது.

நிருவாக சேவையிலும் அரசியல் நடக்கிறது என்பதையிட்டு நான் உண்மையிலேயே விசனமடைகிறேன். இதைச்சொல்லித்தான் ஆகவேண்டும். பிழை நடக்கும் போது அதனைச் சுட்டிக்காட்டுவதும் நீதியமைச்சரின் கடமையென நான் கருதுகிறேன். பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறான பிழையைவிட்ட பொழுதும் அந்தத் தவறை நான் சுட்டிக்காட்டினேன்.

பிரச்சினைகளின் ஊற்றுக்கண் இப்போதைக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். இன்று பலருக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு அச்சப்படும்படியாக நான் எதையும் சொல்லவில்லை.

பொலிஸ் காணி அதிகாரம் மட்டுமல்ல, சட்டமேற்றும் அதிகாரம் கூட பறிபோகலாம். அதுதான் 13ஆம் சட்டத்திருத்தத்தின் உயிர் நாடியாகும்.

பெரும்பாலானவர்களின் முடிவுக்கு இடமளிக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்ட பொழுது, இந்த நாட்டின் வரலாற்றில் பெரும்பாலனவர்களின் முடிவுகளின் விளைவாக சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டதை நான் நினைவூட்டினேன்.

இந்தியா கோபித்துக்கொள்ளும் என்பதற்காக ‘வெள்ளை யானை’ யாக இருந்தாலும் கூட மாகாண சபைகளை வைத்துக்கொள்வோம் என இப்பொழுது கூறுகிறார்கள். இருக்கும் சிலவற்றை பறித்துவிட்டு, எஞ்சியவற்றை இருக்க விடுவோம் என்று எண்ணுகிறார்கள். வெறும் சதைப்பிண்டத்தை வைத்துவிட்டு உயிர்நாடியை அகற்றிவிட்டால் என்ன பயன்?

கிழக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணையை கொண்டு வருமாறு நான் எமது உறுப்பினர்களுக்கு கூறினேன். முதலமைச்சரிடமும் அதனை நான் கூறினேன். அவருக்கும் தற்பொழுது தமது பதவி பறிபோய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் பொழுது அதன் நோக்கு, இலக்கு என்பன மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எல்லா இரும்பையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டுவிட்டு எதனைத் தட்டி புடம்போடுவது என சிந்திப்பதை விட சரியான இரும்பை எடுத்து அதனைத் தட்டி பதம் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லோர் மீதும் பாய்ச்சல் நடத்த முடியாது.

முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர்களிடம் அவர்களது அமைச்சோடும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோடும் சம்பந்தப்பட்ட சட்டங்களை அங்கு கொண்டுவருமாறு கூறியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து அது தொடர்பில் ஆளுநரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப்போகிறது என்பதையும் பரீட்சித்துப் பார்க்கலாம்.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் ஊடாக எந்தப் பிராந்தியங்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்க வேண்டுமென்ற நோக்கங்களில் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு அப்பால் ஏனைய மாகாணங்கள் தான் அதன் பயனை அனுபவித்து வருகின்றன. தென்மாகாண சபையில் அரசாங்கத் தரப்பிலேயே ஒரு சாரார் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

நாடு, நகர அபிவிருத்திக்கான சட்டம் கொண்டு வரப்பட்டபொழுது, கிழக்கு மாகாண சபையில் மட்டுமல்லாது, வடமத்திய மாகாண சபையிலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை. அதனூடாக புனித பூமிகளாக பிரகடனப்படுத்தி நிலங்களை சுவீகரிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பின் காரணமாக அந்த சட்ட மூலம் கைவிடப்பட்டது.

தமது அதிகாரங்கள் கைநழுவிப்போய்விடும் என்பதால், வடமாகாண சபை தேர்தலை நடத்துவதை அங்கு ‘காட்டு தர்பார்’ நடத்துபவர்கள் எதிர்க்கிறார்கள்.

இரண்டு மாகாண சபைகள் இணைவதற்கு 13ஆம் திருத்தச் சட்டம் இடங்கொடுக்கவில்லை. அதனை பாராளுமன்றம் தான் செய்ய வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினரை அதிகமாகக் கொண்டுள்ள பாராளுமன்றம் அதற்கு இடமளிக்குமா? ஜனாதிபதி அதற்கு கையொப்பமிடுவாரா? இவை நடக்கப் போகின்ற காரியங்களா? பெருந்தேசியவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக எவற்றையெல்லாமோ செய்கிறார்கள். 13ஆவது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் முரண்டு பிடித்துக்கொண்டிருப்பதாக கருத்துகளைப் பரப்புகின்றார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடுகிறார்கள்.

தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸூக்கு இடமளிக்கப்படாததற்கு அரசாங்க அமைச்சர்கள் சிலரே என்னிடம் தங்களது விசனத்தை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸூம் இல்லாத தெரிவுக்குழு எதனைச் சாதிக்கப் போகிறது? என்ன நம்பகத்தன்மையை அது ஏற்படுத்தப் போகிறது? அதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் இல்லாத தெரிவுக்குழுவை குப்பையில் தூக்கி வீசுமாறு கூறினேன்.

தாங்களாக தலையில் மண்ணை வாரிக்கொட்டிக்கொள்ளப் போகிறார்கள். பெருந்தேசியவாதத்தின் பசிக்கு தீனி போடப்போகிறார்கள். குழிபறித்து, அந்தக் குழிக்குள் இந்த அரசாங்கம் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் நாங்கள் கூறக்கூடியது.

மக்களின் ஆத்திரம், ஆவேசம் அளவுகடந்து போயுள்ள நிலையில் கட்சியிலிருந்து யாரையும் பிரித்தெடுப்பதும் எவருக்கும் இலேசான காரியமல்ல. மக்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும். நாம் கூறுபவைகள் உரிய இடங்களைச் சென்றடையவும் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நான் செய்வது அசாமான்ய, அசகாயசூர சாதனையல்ல. முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். இது உயிர்களைப் பறிகொடுத்து உருவான இயக்கம்.

1956 இல் கொல்வின். ஆர்.டி. சில்வா, ‘ஒரு மொழி இரு நாடுகள். இரு மொழிகள் ஒரு நாடு’ என்றார். ஆனால் அது ஒருவாறு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தமிழுக்கும் தேசிய மொழி அந்தஸ்த்து என்றளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், தமிழில் தேசிய கீதம் அரசியல் அமைப்பில் இடம் பெற்றிருக்கத்தக்கதாக அதனை இந்த மொழியில் இசைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. சிங்களம் தெரியாத தமிழ் மாணவர்கள் அந்த மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். சிங்களம் தெரிந்தவர்கள் சிங்களத்தில் இசைக்கலாம். அதைவிடுத்து தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் என்ன தவறு என்றார் அமைச்சர் ஹக்கீம்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம். ஜெமீல், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் அன்ஸில், கட்சியின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment