பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக்கல்வியை பயிற்றுவிக்கும் வெலிகமை ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி ஒரு கண்ணோட்டம்

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

பழுளுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் ஒருநகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும் வழமையை இங்கு இன்றும் பல குடும்பங்களில் காணலாம். இப் பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இங்கு இருக்கவில்லை. இக்குறையை நிவர்த்திக்க பலரும் அடி மனதில் ஆர்வமாக இருந்தனர். வெலிகம தாருல் முஃமினாத் நிறுவனமும் இந்தவிடயத்தில் அக்கறையுடன் இருந்தது. அதன் விளைவாக மிக நீண்டகாலமாக தஃவா,சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் 2008 மார்ச் 2ம் திகதி (1429 ஸபர் 22) திகதி ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி என்ற இந்தக் கல்லூரியை ஆரம்பித்துவைத்தது.

இக்கல்லூரி ஆரம்பம் முதல் இன்று வரை வெலிகம வஜிரஞானவீதி இல. 16ல் உள்ள ஒருவாடகை வீட்டிலேயே பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. மத்ரஸாவுக்காக பூரணத்துவமிக்க கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு காணியொன்றும் தற்போது வாங்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்:

இக்கலாசாலையின் பாடத்திட்டம் ஐந்துவருடங்களைக் கொண்டதாகும். இஸ்லாமியசரீஆ, அரபுமொழி சார்ந்தகலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் ஜீ. சீ. ஈ. (சாதாரணதர) பரீட்சைகளுக்கானபாடங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. மனையியல்,மற்றும் கணனிப் பயிற்சிநெறி,முதலுதவிபயிற்சி என்பனவும் இங்கு மேலதிகப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் முன்பள்ளிஆசிரியர் பயிற்சிநெறி, மற்றும் தாதிப் பயிற்சி நெறிகளும் போதிக்கப்பட இருக்கின்றன. தனியானதொரு தையற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டபின் மாணவிகள் தையல், கைப்பணிக் கலைகளில்விசேட திறமையுடையவர்களாகவே வெளியேறுகின்றனர்.

சென்ற ஆண்டு நடந்த முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது மாணவிகளால் நடத்தப்பட்டதையல்,கைப்பணிக் கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.இந்தவருடம் நடைபெறும் பட்டமளிப்பு விழாவையொட்டி கண்காட்சியோடு மாணவிகளின் உற்பத்திகளின் விற்பனை நிலையமும் நடைபெறவிருக்கிறது.

மாணவிகளின் உளவியல், அறிவியல், ஆற்றல் அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக நடாத்தப்படுகின்ற கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் பற்றியும் இங்குகுறிப்பிடுதல் பொருத்தமாகும்.

2008 ல் சவூதிஅராபிய உளவியல் துறை பேராசிரியரான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஹஸ்லல் என்பவரால் நடத்தப்பட்ட, ‘காலமுகாமைத்துவம்’, றியாத் பல்கலைக் கழப் பேராசிரியர் அப்துள்ளா அல் கஈத் என்பவரால் நடத்தப்பட்ட ‘கற்பித்தல் அணுகு முறைகள்’ , 2010ல் ரியாத் பல்கலைக்கழக பேராசிரியர் அஷ்ஷெய்க் கலாநிதி உமர் பின் ஸுஊத் அல்ஈத் நடத்திய ‘தஃவாவும் அதன் அணுகுமுறைகளும்’, ரியாத் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்முஅய்தீ நடத்திய ‘இஸ்லாமியகொள்கைக் கோட்பாடுகள்’ – 2011 ல் சவூதி அராபியபல்கலைக்கழக சகோதரி ஹுலுத் பின்த் காலித் தாவூத் நடத்திய’ஏகத்துவவழிகாட்டி,டாக்டர் மரீனா தாஹாரிபாய் நடத்திய’கருத்தூட்டல்’, டாக்டர் ஸைனப் ஸுபைர் நடத்திய ‘சுகவாழ்வு’ பற்றிய கருத்தரங்குஎன்பனஅவற்றுட்சிலவாகும்.

ஆசிரியர் குழு:
கல்லூரியின் பணிப்பாளராக அஷ்ஷெய்க் எம். ஓ. பத்ஹுர்ரஹ்மான்  (பஹ்ஜி) அவர்கள் பணிபுரிகிறார். கொழும்பு மௌலவிய்யா ஆயிசா மிகார்தீனின் தலைமையில் திறமையும் தகுதியும் வாய்ந்த ஒரு ஆசிரியர் குழு மாணவிகளுக்கான கல்விபோதனை, மற்றும் தர்பியாப்பயிற்சிகள் மிக அர்ப்பணத்துடன் மேற்கொண்டு வருகின்றது.
வெலிகமை ஸமீம்,காலிமிப்றஹா ஹுஸைன்,வெலிகமை பர்ஹானா அப்துர் ரஹ்மான் மற்றும் பாதிமா பத்ஹுர்ரஹ்மான் ஆகிய மௌலவியாக்கள் ஷரீஆப் பிரிவில் கடமைபுரிகின்றனர். ஷரீஆக் கல்விப் போதனையில் பல தசாப்தகால அனுபவம் மிக்க அஷ்செய்கு தீனுல் ஹஸன், அஷ்செய்கு பௌஸுர் ரஹ்மான், ஆகியஉலமாக்களின் பகுதி நேர விரிவுரைகளி வழிகாட்டலில் மாணவிகள் மேலதிக உயர் கல்வியைப் பெற்றுவருகின்றனர்.

தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மதனிய்யா கலீலின் மேற்பார்வையின் கீழ் ஜீ.சீ.ஈ. (சாதாரணதர) பரீட்சைக்கான பாடத்திட்டம்  போதிக்கப்படுகின்றது. கல்லூரியின் விடுதிப் பொறுப்பாளராக அநுராதபுரம் அஸீமாஷாஹுல் ஹமீத் அவர்கள் கடமையாற்றுகிறார். நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 80 மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர்.கட்டிட மற்றும் இட வசதிகள் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை மென்மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறோம்.
கடந்த ஆண்டுபட்டம் பெற்ற மாணவிகளுக்கு தையல் மெசின்கள் பரிசாகவழங்கப்பட்டன. இம்முறையும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிவிசேட திறமைசாலி ஒரு மடிகணினியைப் பரிசாகப் பெறுகின்றார்.

தொகுப்பு:-
எம். மிஃப்ராஹ்
வெலிகம

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment