காத்தான்குடி: ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் நிதியுதவியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை மூன்று பள்ளிவாயலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேன் நிறுவனத்தனின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிதாஉல் கைர் சர்வதேச அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத், றியாத் நகர் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அபூ பிர்தௌஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிவாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் மும்தாஸ் மதனி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி றுஸ்வின், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது பள்ளிவாயல் நிறுவுவதற்கான அடிக்கல் நிதாஉல் கைர் சர்வதேச அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத், றியாத் நகர் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அபூ பிர்தௌஸ் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் நடப்பட்டது.
இதில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாயல் வளாகத்தில் ஆண்களுக்கான பள்ளிவாயலும், கடை தொகுதியுடன் கூடிய பெண்கள் பள்ளிவாயலுக்கான அடிக்கல்லும் காத்தான்குடி சரீப் புறக்கடர் வீதியில் அமைந்துள்ள சின்னக் கபுறடி பள்ளிவாயலுக்கான அடிக்கல்லுமாக மொத்தம் மூன்று பள்ளிவாயலுக்கு அடிக்கல் இன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment