கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் பைசல் நகர் சின்னத்தோட்டத்தில் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றினை பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கையின் பொருட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இன்று 26.06.2013 இடம்பெற்றது.
திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டின் வெற்றிகரமான செயற்பாடாக எமது பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை பெறுமதியாக்கும் வகையில் சேதனைப்பசளை மற்றும் மீள்சுழற்சி செயற்பாடுகளை மேற்கொள்ளல் என்ற அடிப்படையில் ஜெய்கா திட்டத்தின் திண்மகழிவு முகாமைத்துவ நிதியிலிருந்து உள்ளுராட்சி அமைச்சின் உதவியுடன் நகரசபையின் முன்னெடுப்பில் அமைக்கப்படவிருக்கும் கழிவுகளை தரம்பிரிக்கும் நிலையம் 4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கின்றது.
இதன் மூலம் கழிவுகளை மக்களுக்கு பயனள்ளதாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் நகரபிதா தெரிவித்தார். நகரபிதா ஹில்மியின் அயராத முயற்சியின் பயனாக அமைக்கப்படவிருக்கும் நிலையத்திற்கான அடிக்கல்லினை நகரபிதா ஹில்மி நாட்டிவைத்தார்.
பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ ஜம்சித் தொகுத்துவழங்கிய இந்நிகழ்வுக்கு நகரபிதா எம்.எம்.ஹில்மி, நகரசபை உறுப்பினர் ஏ.கே.பாஜில், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், ஊஊனு சந்திரசேன செனவிரத்தின, பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி ஏ.சி.எம்.முஸ்இல், பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.நசுஹர்கான், கிண்ணியா உலமாசபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா, பள்ளிவாயல் தலைவர்கள், கோயில் தலைவர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




Leave a comment