ஐ.சி.சி நடுவர் குழுவிலிருந்து அஸாட் ரவூப், பில்லி பௌடன் நீக்கம்

டுபாய்: சர்வதேசக் கிரிக்கெட் சபையின் எலைற் நடுவர் குழுவிலிருந்து நடுவர்களான அஸாட் ரவூப், பில்லி பௌடன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் பதிலாக இங்கிலாந்தைச் சேர்ந்த றிச்சர்ட் இலிங்வேர்த், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த போல் றெய்ஃபல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2013-2014 பருவகாலத்திற்கான 12 பேர் கொண்ட எலைற் நடுவர் குழுவிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நடுவராக அறிவிக்கப்பட்ட அஸாட் ரவூப், அதன் பின்னர் ஐ.பி.எல் இல் ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுப்பப்பட்டதையடுத்து அத்தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கும், அஸாட் ரவூப் இந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டதற்குமிடையில் சம்பந்தங்கள் கிடையாது எனத் தெரிவித்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை, கடந்த வருடத்தின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நடுவர்கள் கடந்த 12 மாதங்களில் வெளிப்படுத்திய திறமை வெளிப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சர்வதேசக் கிரிக்கெட் சபை, புதிய நடுவர்களை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

எலைற் பனல் நடுவர்கள்:

அலீம் தார், குமார் தர்மசேன, ஸ்டீவ் டேவிஸ், மராயஸ் எரஸ்மஸ், இயன் கூல்ட், ரொனி ஹில், றிச்சர்ட் கெற்றல்புரோ, நைஜல் லோங், புரூஸ் ஒக்ஸென்போர்ட், ரொட் ரக்கர், றிச்சர்ட் இலிங்வேர்த், போல் றெய்ஃபெல். Ls

Published by

Leave a comment