காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடி பஸ் டிப்போவில் ஆட்கொல்லி டெங்குநோய் நுளம்பு குடம்பிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் றபீக்,பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மதுல்லாஹ் அடங்கலான குழுவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போதே குறித்த டெங்கு நுளம்பு குடம்பிகள்கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் குறித்த பஸ் டிப்போவிற்கு எதிரே உள்ள வீடொன்றில் 08மாதக் குழந்தையான ரய்ஸ் அஹமட் என்ற சிறுவனுக்கு டெங்கு நோய் ஏற்பட்டு காத்தான்குடி வைத்தியசாலை பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றது.
குறித்த பிரதேசத்தில் சிறு குழந்தைக்கு டெங்கு வந்ததற்கான காரணத்தை கண்டறிய வந்த காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் இதை கண்டுபிடித்துள்ளதாக டெங்கினால் பீடிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு காத்தான்குடி பஸ் டிப்போவிலிருந்துதான் உற்பத்தியாகின்றது என்பதை அறிந்து கொண்ட போதும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆறுதல் வார்த்தையை கூறினாரே தவிர அதற்கெதிராக எவ்வித சட்ட நடவடிக்கையிலும் எடுக்கவிலையென குழந்தையின் தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பஸ் டிப்போ துப்பரவு செய்யப்படுவதில்லையென்றும் இதனாலேயே டெங்கு நுளம்புகள் இங்கு உற்பத்தியாகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீனை தொடர்பு கொண்டு கேட்ட போது இன்று குறித்த பஸ் டிப்போவில் டெங்குக் குடம்பிகள் காணப்பட்டதுடன் அதனை சுத்தம் செய்யுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளதுடன் மூன்று அவகாசம் அதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் பல வெற்றுக் காணிகள் துப்பரவு செய்யப்படாமல் விடப்பட்டிருப்பதனால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக இருப்பதனால் இதற்கான தகுந்த நடவடிக்கையை காத்தான்குடி நகர சபையும் பிரதேச சுகாதார வைத்திய பணிமனையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a comment