காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2012/2013 ஆண்டுக்கான புதியதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.ரீ.எம் காலித் (ஜேபி) யுடனான நேர்காணல்

khalidநேர்காணல்: பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்

1984ம் ஆண்டு அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையினால் ஸ்தாபிக்கப்பட்ட  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சுமார் 15 குழுக்களை உள்ளடக்கி சிறப்பாக இயங்கி வருகிறது. அவசரக்குழு, கூட்டு ஸகாத் நிதியம், ஹஜ் மற்றும் உம்றாக்குழு, பாரியநோய் நிவாரணக்குழு, திருமண நல்லிணக்க சபை, பள்ளிவாயல்கள் நிர்வாகதெரிவுக்குழு, கொடுக்கல் வாங்கள் பிணக்குத் தீர்ப்புக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் தனித்தனியாகமிகசிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

கேள்வி: காத்தான்குடியிலுள்ள சில பாடசாலைகளில் பாடசாலைப் பாடங்கள் சரிவர இடம்பெறுவதில்லை எனவும் மாணவர்கள் பாடசாலையைவிட டியூட்டரிகளைத்தான் விரும்புகிறார்கள் எனவும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களது கருத்துஎன்ன?

பதில்: இவ்வாறான செயற்பாடு காத்தான்குடியில் மட்டுமல்ல. நாடளாவியரீதியில் சில பாடசாலைகளில் பாடங்கள் இடம்பெறுவதில்லை. பாடசாலைகளில் ஒருசில ஆசிரியர்கள் செய்கின்ற அசமந்தப் போக்கினால்தான் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்தடி யூஷன் வகுப்புக்களினால் வறியமாணவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எமது சம்மேளனத்தில் கல்விக் குழுவுடன் பேசி கலந்துரையாடி பாடங்களுக்கு பொறுத்தமான தரமான ஆசிரியர்களை நியமித்து மாணவர்கள் பாடசாலைகளிலேயே சிறப்பாக கல்வியை பெறக்கூடியதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தவுள்ளோம்.

கேள்வி: பள்ளிவாயல்களிலுள்ள நிர்வாகங்களுக்கு மத்தியில் ஒற்றுமையின்மை மட்டுமல்லாமல் நிர்வாக தெரிவுகள் இடம்பெறும் வேளையில் கூச்சலும் குழப்பமும் கைகலப்பும் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன? இது தொடர்பில் உங்கள் கருத்துஎன்ன?

பதில்: இது தொடர்பில் குறிப்பாக நிர்வாகத் தெரிவு தொடர்பில் புதிய பொறிமுறை ஒன்றை கையாளவுள்ளோம். அண்மையில் இடம்பெற்ற காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் கூச்சல் ஆகியவற்றிற்கு பின்பு இந்த புதிய பொறி முறையை அமுல்படுத்தவுள்ளோம்.

இதற்கான முக்கியகாரணம் பல தஃவா அமைப்புக்கள் காணப்பட்டு நாங்கள்தான் நிர்வாகம் செய்யவேண்டும் என்று ஒவ்வொரு அமைப்புக்களும் விரும்புகின்றன. எல்லா தஃவா அமைப்புக்களும் ஒன்றிணைந்துதான் நிர்வாகத்தை கொண்டுசெல்லவேண்டும். தனித் தனியாக முரண்பட்டுச் செல்லக் கூடாது.ஏ னெனில் நாம் செய்யக் கூடிய வேலைகளில் அமானிதங்களில் மிகப் பெரிய அமானிதம் பள்ளிவாயலை நிர்வாகம் செய்வது.

ஆகவே இதில் சகல தஃவா அமைப்புக்களும் ஒன்றிணைந்துதான் பள்ளிவாயல் நிர்வாகங்களை நேர்த்தியாக கொண்டு செல்லவேண்டும்.

???????????????????????????????

கேள்வி: தஃவா அமைப்புக்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் ரீதியாக பிரிந்து காணப்படும். அவற்றை இணைத்துக் கொண்டால் அங்கே சிலவேளைகளில் பல்வேறு மார்க்க குழப்பங்களும் வணக்க வழிபாடுகளுக்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும். இது தொடர்பில் உங்கள் கருத்துஎன்ன?

பதில்: தஃவா அமைப்புக்களை பள்ளிவாயல் நிர்வாகத்திற்குள் உள்வாங்குகின்ற விடயத்தில் நாங்கள் தன்னிச்சையாக செயற்படுவதில்லை. அந்தப் பொறுப்பை ஜம்மியதுல் உலமாவிடம் ஒப்படைத்துள்ளோம். ஜம்மியதுல் உலமா அங்கீகரிக்கின்ற அமைப்புக்களைத் தான் நாங்கள் உள்வாங்குவோம். ஏனெனில் பள்ளிவாயலை நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று மறுமை நாளை ஈமான் கொண்டு தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை கொடுத்து அல்லாஹ்வைத் தவிரவேறு எவருக்கும் பயப்படாதவராக இருத்தல் வேண்டும் என்பதை அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவேதான் அந்தப் பொறுப்பை உலமாக்கள் இருக்கின்ற ஜம்மியதுல் உலமாவிடம் கொடுத்து இருக்கின்றோம்.

கேள்வி: காத்தான்குடியிலுள்ள சகல மையவாடிக் காணிகளும் அரச காணிகளே! எனஅரசியல் ரீதியாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் என்னநினைக்கிறீர்கள்?

பதில்: 1995ம் ஆண்டு நான் முதன்முதலாக காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டபோது அப்போது நகரசபைத் தவசாளராக இருந்த சேர்மன் காசீம், ஜாமியழ்ழாபிரீன் மையவாடிக் காணியை எமக்கு தாருங்கள் என்றுசொன்னார். நாங்கள் சொன்னோம் வக்புசபையின் அனுமதியில்லாமல் இதை தரமுடியாது எனக் கூறிய பின்பு, ஒருநாள் வெள்ளிக்கிழமை மையவாடிக்குச் சென்று மீசான் கட்டைகளை பிடுங்கி வீசியிருந்தார்கள்.

நாங்கள் இதை  தெளிவாகஅன்றைய குத்பாவிலும் சொன்னோம். பின்னர் பல பிரச்சினைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்திற்கு சென்ற போது நீதிபதி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, 1960ம் ஆண்டிலிருந்து இந்த மையவாடிகளையெல்லாம் பள்ளிவாசல்கள்தான் வைத்திருக்கின்றது எனக் கூறியமை மையவாடிக் காணிகள் குறிப்பாக ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி பள்ளிவாயலுக்குரியது எனதீர்ப்பளித்தார்.

ஆனால் அரசாங்கம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ‘கிளைம்’ பண்ணலாம். உள்ளுர் சபைக்கு வரும் போது இடுகாடு சுடுகாடு சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு வரவேண்டும். அப்படித்தான் வந்தாலும் இடுகாடு, சுடுகாடு சட்டத்தின் கீழ் வரும் காணிகளில் யாரும் எவ்வித கட்டிடங்களையும் கட்டமுடியாது. அப்படித்தான் கட்டுவதற்கு அனுமதி எடுத்து உள்ளுராட்சி மன்றத்திற்குகொடுத்தாலும் காத்தான்குடியைப் பொறுத்தவரையில் பரவாயில்லை.

பிரச்சினையில்லை. 100வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற எமது காத்தான்குடி பிரதேசம். பட்டினமன்றத்திலிருந்து உள்ளுராட்சி சபை, பள்ளிவாயல் நிர்வாகம் உட்பட சகலவற்றிற்கும் முஸ்லிம்களே பொறுப்பாக உள்ளனர்.

ஆனால் ஏனைய ஊர்களில் அவ்வாறில்லை. எமது அயல் ஊரான ஆரையம்பதியின் கட்டுப்பாட்டிற்குள் முஸ்லிம் கிராமங்களான காங்கேயனோடை, பாலமுனை, சிகரம், ஒல்லிக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் காணப்படுகின்றன. குறித்தகிராமங்களில் இருக்கும் மையவாடிக் காணிகள் பள்ளிவாயல்கள் வசமேகாணப்படுகின்றன.

காத்தான்குடியில் மையவாடிக் காணிகள் உள்ளுராட்சி சபைக்குரியது என்று கட்டடங்களை கட்ட சிந்திப்பதைப் போன்று ஆரையம்பதி மற்றும் நாடு பூராகவுள்ள சிங்கள மற்றும் இதர நகரங்களின் உள்ளுராட்சி மன்றங்கள் சிந்தித்தால் முஸ்லிம்களின் மையாவடிக்கு என்ன கதி ஏற்படப் போகின்றது என்பதை சிந்திக்கவேண்டும்.

காத்தான்குடியிலுள்ளஎ ந்தப் பள்ளிவாயல்களும் அபிவிருத்திக்கு தடையில்லை. 1995ம் ஆண்டு நீதிமன்றினால் ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி பள்ளிவாயலுக்குச் சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்ட பின்பும் 1996ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்காக மையவாடிக் காணியைகொடுத்தோம். ஏலவே காத்தான்குடி நகர சபை இயங்கிவந்த காணியை 1987ம் ஆண்டு காத்தான்குடி பொது வாசிகசாலைக்காக உறுதி எழுதப்பட்டு கொடுக்கப்பட்டதுடன் வாசிகசாலை இயங்காத காலத்தில் கட்டடமும் காணியும் பள்ளிவாயலுக்குச் சொந்தமானது என உடன்படிக்கையும் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்புஅதிலேயே நகரசபையும் இயங்கிவந்தது.

அதுமாத்திரமல்ல. பாதைகளுக்காகவும் நிறைய இடங்களையும் கொடுத்திருக்கின்றது.

1987ம் ஆண்டு காலப்பகுதியில் 15ஏக்கராக இருந்தது. தற்போது 08 ஏக்கராகத்தான் இருக்கின்றது.

பள்ளிவாயல் நிர்வாகம் எந்தவொன்றும் கேட்கவில்லை. எனவே பள்ளிவாயல் நிர்வாகம் ஒருபோதும் அபிவிருத்திக்கு தடையில்லை. ஆனால் இந்தமையவாடிக் காணிகளை கட்டடங்கள் கட்டுவதற்காக எடுப்பதனால் எங்களுடைய ஊருக்கு எவ்விதஆபத்தும் ஏற்படாது. ஆனால் ஏனைய ஊர்களின் நிலைமையையும் யோசிக்கவேண்டும்.

இந்தமையவாடி விடயத்தில் சகலரிடத்திலும் விட்டுக் கொடுப்பு வரவேண்டும். இந்தவிடயத்தில் சகலதரப்பினரும் கூட்டாக இணைந்துபுரிந்துணர்வுடன் செயற்படவேண்டும்.

???????????????????????????????

கேள்வி: ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் மையவாடிக் காணிகள் தொடர்பில் நீதிமன்றம் நகரசபைக்குரியது என தீர்ப்பளித்திருப்பதாக காத்தான்குடி நகரசபை தெரிவிக்கின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்துஎன்ன?

பதில்: நகரசபைக்குரியது என நீதிமன்றம் எமக்கு தெரிவித்தால் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நகர சபைகளுக்கும் பள்ளிவாயல்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் உறுப்பினர்களை தெரிவு செய்வது பொதுமக்கள்தான் என்பதைமறந்துவிடக் கூடாது. பாரிய பொறுப்பு பள்ளிவாயல்கள்களை நிர்மாணிப்பதாகும்.

கேள்வி:சம்மேளனத்தில் இருக்கின்ற திருமண நல்லிணக்கசபையினூடாக எவ்வாறானநடடிவக்கைகளை மேற்கொள்கின்றீர்கள்?

பதில்: குறித்த திருமணநல்லிணக்க சபை என்பதை நான் 2003ம் ஆண்டு சம்மேளனத் தலைவராக இருக்கும் போதே நான்தான் இறைவனின் உதவியால் ஆரம்பித்தேன். குறிப்பாக இந்த திருமண நல்லிணக்க சபை என்பது காதி நீதிபதினால் சமரசம் செய்ய முடியாத விடயங்களை தீர்த்துவைக்கும். ஏனென்றால் காதி நீதிமன்ற சட்டத்திலும் உள்ளது. காதி நீதிபதியினால் தீர்த்துவைக்க முடியாதபிரச்சினைகளை ஊர்த்தலைமைகள் தீர்த்துவைக்கலாம். குறித்த சபையினூடாக திருமண விடயங்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது, சமரசம் செய்ய முயல்வது என பல்வேறு சேவைகளைஆற்றிவருகின்றது.

கேள்வி: காத்தான்குடி போன்று மற்ற இடங்களில் சம்மேளனம் உருவாக்கப்பட்டிருந்தும் அவைகள் அந்தளவிற்கு பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்துஎன்ன?

பதில்: காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட குறித்த சம்மேளனம் உருவாக்கப்பட்டதன் பின்பு வக்புசபையில் காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இல்லை. ஏனெனில் அந்த விடயங்களை சம்மேளனம் பார்க்கும் என வக்பு சபை சொல்லும். இந்த சம்மேளனம் சிறந்த ஆளுமைமிக்கவர்களையும் சிறந்த கட்டமைப்பையும் வைத்திருப்பதனாலும் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினாலுமே மிகசிறப்பாக எமது சம்மேளனம் நடைபோடுகின்றது.

கேள்வி: பொதுவாக காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜும்மாத் தினங்களில் குறிப்பிட்ட சிலநேரம் ஹெல்மட் (தலைக்கவசம்) அணியத் தேவையில்லை என்பது பரவலாக காணப்பட்ட விடயம். அண்மையில் காத்தான்குடியிலுள்ளப ள்ளிவாயலில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் மட்டக்களப்பு மாவட்ட டீ.ஐ.ஜி, முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாக இருப்பதனால் குறிப்பிட்ட சிலநேரம் ஹெல்மட் அணியத் தேவையில்லை என ஒருச லுகையைத் தந்தார். சலுகை கொடுக்கப்பட்டு அதற்கடுத்த கிழமை ஜும்மாவுக்குச் சென்ற ஹெல்மட் அணியாதசுமார் 32 பேர் பிடிக்கப்பட்டனர். மீண்டும் நாம் கேட்டபோது நாம் அப்படிச் சொல்லவில்லை.ஹெல்மட் அணிவது கட்டாயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது காத்தான்குடியைப் பொறுத்தவரையில் சாத்தியமாகுமா?

பதில்: பொதுவாக இந்தவிடயம் தொடர்பில் நாம் உயர் மட்டகுழுவினருடன் பேசிமுடிவெடுப்போம். ஆனால் எமதூரில் சிலமக்கள் சலுகையாக வழங்கப்பட்டநேரத்தைவிட மாலை நேரங்களிலும் ஹெல்மட் அணியாமல் செல்வது, சலுகையை துஷ்பிரயோகம் செய்யஎ த்தணிப்ப துஉள்ளிட்ட பல்வேறு விடயங்களை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது மட்டுமல்லாமல் பூரணதீர்வைப் பெற்றத் தருவதற்கு நாம் முயற்சிப்போம் எனத் தெரிவித்தார்.

கேள்வி: எமதூரிற்குள் பெண்கள் கடற்கரைச் செல்வதற்கானநேரம், டியூஷன் கிளாஸ்களுக்குசெல்லும் நேரங்கள் வரையரை இல்லாமல் காணப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அரபுக் கல்லூரிகளுக்கு அதிகாலை 05.30 மணிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகளுக்கு தற்போது 06.00  மணிக்குப் பிறகுசெல்லுமாறுபணித்திருக்கின்றோம். டியூஷன் வகுப்புக்களுக்கும் பெரிய  மாணவிகளை மாலை 06.00 மணிக்குப் பின்னர் போகக் கூடாது என பணித்திருக்கின்றோம்.

ஆகவே ‘2 வருடங்களுக்கு தலைவராக வந்திருக்கின்ற நான் இம்முறை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நிர்வாகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முயற்சித்துள்ளேன்’ என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2012/2013 ஆண்டுக்கான புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.ரீ.எம் காலித் (ஜேபி) தெரிவித்தார்.

Published by

Leave a comment