கிண்ணியா: யூரானியா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று கிண்ணியா பைசல் நகர் மைதானத்தில் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கிண்ணியாவின் பாரம்பரிய விளையாட்டான சீனடி வரவேற்பு வீரர் ஒருவரினால் போடப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டி ஒன்றுபட்ட சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்டது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டன. ஐ.பி.எல் போட்டிகளைப் போன்று கே.பி.எல் என மைசல் நகரை சுற்றியுள்ள ஊர்களின் பெயர்களை வைத்து இக்கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு அலஸ்தோட்டம் மற்றும் ஆலங்கேணி அணிகள் தெரிவானது.
இதில் ஆலங்கேணி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அலஸ்தோட்ட அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஆலங்கேணி அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி உரையாற்றும் போது ‘ இந்த மைதானம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. என்னால் இயலுமான உதவிகளை இந்த மைதானத்திற்கும் இப்பிரதேச மக்களுக்கும் வழங்க காத்திருக்கிறேன். அத்தோடு முதலில் இந்த மைதானத்தை வீரர்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு செப்பனிட்டு ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனால் இவற்றை செய்வதற்கு உரிய அதிகாரிகளை அனுப்புகின்றேன். இம்மைதானத்தில் கால்பந்து விளையாடுவதற்கான கோல் கம்பங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகின்றேன்’ என தனதுரையில் நகரபிதா ஹில்மி தெரிவித்தார்.
இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு நகரபிதா கேடயத்தினையும் பணப்பரசினையும் வழங்கிவைத்தார். நிகழ்வில் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி, கால்தீன், பாயிஸ், ஜெசூர், மௌலவி ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Leave a comment