கொழும்பு: இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் ஆரம்பித்த பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் தொகையைக் குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடு தொடர்பான தகவல்களை வழங்கும் CHOGM2013.lk என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் கடந்தவாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதில், இலங்கை தொடர்பான விபரங்கள் இடம்பெற்ற பகுதியில், இலங்கைத் தமிழர்களின் சனத்தொகை 3.9 வீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2012ம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதமாகும்.
இலங்கைத் தமிழர்களை விட அதிகமாக, மலையகத் தமிழர்கள் 4.6 வீதம் வாழ்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் தொகையையும், 9.7 வீதம் என்பதற்குப் பதிலாக, 7.2 வீதம் என்று குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. 12.6 வீதமாக உள்ள இந்துக்களை 7.1 வீதம் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தரவுகள் பதிவேற்றப்பட்டது குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வலைப்பதிவில் சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நான்கு நாட்களுக்குப் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தரவுகள் திருத்தப்பட்டுள்ளன.
எனினும், திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அந்த இணையத்தளத்தை 10 ஆயிரம் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![CHOGM-Logo-lg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/chogm-logo-lg1.jpg?w=247&h=245)
Leave a comment