லண்டன்: கிரிக்கட் சரித்திரத்தில் ஓர் சிரேஷ்ட தொடர் ஒன்று இன்றுடன் இல்லாமல் போவது இது முதற்தடவையாகும். ஆம். இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரின் எங்பஸ்டன் நகரில் இடம்பெறும் இறுதிப்போட்டியுடன் 15 வருட வரலாற்றைக் கொண்ட ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் இங்கிலாந்தில் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.
1998ம் ஆண்டு பங்களாதேஸ் டாக்கா நகரில் ஐ.சி.சி நொக்கவுட் தொடர் என அறிமுகமான இத்தொடர், 2002ம் ஆண்டிலிருந்து ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் என அழைக்கப்பட்டு வந்தது.
2007ல் சர்வதேச இருபது20 போட்டிகளின் தேவைகள் கிரிக்கட் விளையாடும் நாடுகளில் உணரப்பட்டதால், சர்வதேச கிரிக்கட் சம்மேளனம், அவ்வாண்டில் இருந்து இரு வருடங்களுக்கு ஒரு முறை இருபது20 போட்டிகளை நடாத்தி வருகின்றது.
எனவே, இருபது20 உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறுவதால் ஐ.சி.சி. கிண்ணத்துக்கான போட்டித் தொடர் ஒன்று அவசியமற்றது என சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் தீர்மானத்தின் படி, இன்று மாலை வேளையுடன் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண வரலாறு நிறைவுக்கு வருகிறது.
இன்றைய போட்டியில் தனது சொந்த மண்ணில் பலம் பொருந்திய இந்தியாவை எதிர்த்தாடுகிறது இங்கிலாந்து. இந்தியாவின் பலத்தை விபரிப்பதற்கு தேவை ஒன்று இல்லை. மறு முணையில் இங்கிலாந்து ஓர் சிறந்த அணியாக தற்பொழுது உலக கிரிக்கட் வல்லுனர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
1980-90 காலப்பகுதியில் இருந்த இங்கிலாந்து அணியைவிடவும், ஓர் சிறந்த இளம் அணியாக, இன்று இங்கிலாந்து அணி இருப்பதாக கருதப்படுகிறது.
கிரிக்கட் ஆரம்பித்த வரலாற்றிலிருந்து ஐ.சி.சி யின் எந்தவொரு சிரேஷ்ட கிண்ணங்களையும் வெற்றி பெற முடியாமலிருந்த இங்கிலாந்து, 2010ல் கிரிக்கட் வரலாற்றில் முதன் முதலாக இருபது20 உலகக் கிண்ணத்தை வென்றது.
இன்று நடைபெறும் போட்டியில் பலமிக்க ஓர் இளம் அணியாக களமிறங்கும் இங்கிலாந்து, எவ்வாறு பலம் பொருந்திய இந்திய அணியை எதிர்கொள்ளப்போகின்றது என்பதை உலக கிரிக்கட் இரசிகர்கள் வைத்தகண் வாங்காமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்றை போட்டி எக்பங்ஸ்டன் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. இப்போட்டியின் பிரதான நடுவர்களாக குமார் தர்மசேனா (இலங்கை), ரொட் டக்கர் (அவுஸ்திரேலியா) ஆகியோரும், தொலைக்காட்சி நடுவராக புரூஸ் ஒக்ஸன்போர்ட் (அவுஸ்திரேலியா), மற்றும் போட்டி நடுவராக ரன்ஜன் மடுகல்ல (இலங்கை) ஆகியோரும் பங்கேற்பர்.
10-15 செல்சியஸ் வரையான வெப்பம் மைதானத்தில் நிலவும் எனவும், மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், பி.பி.சி. யின் வானிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
மழை காரணமாக போட்டி கைவிடப்படுமாயின், இரு அணிகளும் இணைப்பு வெற்றி பெற்ற (Joint Winners) அணிகளாக அறிவிக்கப்படும். இதே போன்று ஒரு நிலை 2002 ஐ.சி.சி தொடரில் இடம்பெற்றிருந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் விளையாடி இருந்தன. மழை காரணமாக இருநாடுகளும் இணைப்பு வெற்றியாளர்களாக அறிவிக்கப்ட்டிருந்தனர்.
வேகமாக நகரும் உலகில் இன்னும் 10 வருடங்களின் பின்னர் தோன்றும் கிரிக்கட் சமூகத்துக்கு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் பற்றி, நாங்கள் விபரித்து சொல்லிக் கொடுக்க நேரிடும்.

![image_20130618160717[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/image_201306181607171.jpg?w=628&h=355)



Leave a comment