இன்றைய காலத்தில் சமூகக் குற்றங்களை ஒழித்துக் கட்ட அனைவரும் இன மத பாகுபாடின்றி பாரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – மட்டு-அரசாங்க அதிபர் சார்ல்ஸ்

charles– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: சமூகக் குற்றங்களை ஒழித்துக் கட்ட அனைவரும் இன மத பாகுபாடின்றி பாரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.

கலாசார அலுவலகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

 அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 இன்றைய காலகட்டத்தில் எமது மாவட்டத்தில் சமூக குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.

வயது பாகுபாடின்றி மது மற்றும் போதை வஸ்து பாவனை,பாலியல் துஷ்பிரயோகம்,குடும்ப வன்முறை,சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாதிருத்தல்,சிறுவர்களை வேலைக்கமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

 பெற்ற தகப்பன் என்ற உணர்வில்லாமலும் தனது மகளை பாலியலுக்கு உட்படுத்தக் கூடிய அளவுக்கு போதை மனிதனை மாற்றிவிடுகின்றது.

 இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் எல்லோரும் இன மத வேறுபாடின்றி மிகப்பெரிய பாரிய சமூகக் குற்றங்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

 சமூகக் குற்றங்கள்,பாலியல் நடவடிக்கைகள் என்பதற்கு அப்பால் ஆரோக்கியமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு இன்று எமக்குள்ளது.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் சிந்தனையின் கீழும் ஆசியாவின் அறிவுப் பொக்கிஷமாக இலங்கை திகழ வேண்டும் என்ற எண்ணத்திற்கமைவாகவும் சமூகத்திற்கு மத்தியில் பாரம்பரிய கலாச்சார உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

 இலங்கை வரலாற்றில் பல்வேறு கலாச்சாரங்கள்,சிறப்பம்சங்கள்,பாரம்பரிய விழுமியங்கள் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

 ஆனால் இன்று பாரம்பரிய அம்சங்கள் இல்லாது மறைந்து போய் மக்கள் பாரம்பரிய கலாச்சார உணர்வுகள் அற்றவர்களாக மாறியிருக்கிறார்கள்.

 இவற்றை நீக்கி பாரம்பரிய கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதை புனரமைத்து வருகின்றோம்.

அதன் ஒரு கட்டமாகத்தான் இந்த நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளோம்.

இன்று எமது உணவுப் பழக்க வழக்கத்தில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை ‘பாஸ்டட் பூட்’ என அழைக்கப்படும் உடண்உணவுகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 குறித்த உணவால் உடம்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

இலங்கை பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவதற்காக வெளிநாடுகளில் நீண்ட வரிசைகளில் நின்று அதை சாப்பிடுகின்றார்கள்.

 வெளிநாடுகளில் எமது பாரம்பரிய உணவுகளுக்கு இருக்கின்ற கவனம் எமது நாட்டிலே இல்லாதுள்ளது.

இந்த பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை இன்றைய நவீன முறைக்கேற்ப ஆரோக்கியமான முறையில் பூரன சுகாதாரத்துடன் வழங்குவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகின்றோம்.

 அதற்கு பிரதேச செயலாளர்கள்,கலாசார உத்தியோகத்தர்கள்,பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Published by

Leave a comment