டோஹா: இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஆப்கான் அரசு இடைநிறுத்திக் கொண்டுள்ளது. தலிபான்களுடனான அமைதி செயற்பாடு தொடர்பில் அமெரிக்காவின் கருத்து மற்றும் செயலில் முரண்பாடு காணப்படுவதாக குற்றம்சாட்டியே ஆப்கானிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளது.
தலிபான் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை கட்டாரில் அரசியல் அலுவலகம் திறந்ததை அடுத்து அந்த அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா அறிவித்ததை அடுத்தே ஆப்கான் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் தலிபான்களின் கட்டார் அலுவலகத்திற்கு சூட்டப்பட்ட பெயரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை ஜனாதிபதி இன்று காலை (புதன் கிழமை) இடைநிறுத்திக் கொண்டார்” என ஜனாதிபதி ஹமிட் கர்சாய்யின் ஊடகப் பேச்சாளர் அய்மால் பாய்சி ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். “ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்கா வெளியிடும் கருத்துக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகிறது” என்றும் பாய்சி குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படைகள் முழுமையாக வெளியேறிய பின் அங்கு சிறு அளவான அமெரிக்க இராணுவத்தினர் நிலை நிறுத்தப்படுவது தொடர்பிலேயே அமெரிக்காவுக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இதில் வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றத்திற்கு பின் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை, எந்த நிபந்தனையின் அடிப்படையில் செயற்படுவார்கள் போன்ற விடயங்களில் அமெரிக்கா – ஆப்கானுக்கு இடையில் உடன்பாடு எட்டப்படவிருந்தது.
எனினும் இந்த உடன்படிக்கை ஆப்கானின் இறையாண்மையை பாதிக்கும் என்ற வகையில் இது தொடர்பில் ஜனாதிபதி கர்சாய் ஏற்கனவே மீள்பரிசீலனை செய்து வந்ததாகவும் அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் கூறியுள்ளார். இது தவிர கட்டார் தலைநகர் டோஹாவில் திறக்கப்பட்ட தலிபான் அலுவலகத்திற்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் குறித்தும் ஜனாதிபதி கர்சாய் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“இவ்வாறான ஒன்று இல்லாமல் பெயர் சூட்டப்படுவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்” என அய்மால் பாய்சி மேலும் தெரிவித்தார். “ஜனாதிபதியின் நிலைப்பாட்டையும் அமெரிக்காவும் உணர்ந்து கொண்டிருக்கும்” என்றும் அவர் கூறினார். இது தவிர கட்டார் அலுவலகத்தில் தலிபான் கொடி பறக்கவிடப்பட்டிருப்பதற்கும் ஜனாதிபதி சர்சாய் எதிர்ப்பு வெளியிட் டுள்ளார். ஏற்கனவே தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. இந்த பேச்சுவார்த்தை டோஹாவில் அடுத்த வாரம் இடம்பெறும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டிருந்தது.
மறுபுறத்தில் அன்றைய தினமே தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் விரைவில் கட்டார் செல்லவுள்ளதாக ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் குறிப்பிட்டிருந்தார். எனினும் ஆப்கான் அரசுடன் எந்த முறையான ஆலோசனையும் இன்றி கட்டார் மற்றும் அமெரிக்கா அமைதிச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கர்சாய் தனது அதிருப்தியை வெளியிட் டிருந்தார். மறுபுறத்தில் கட்டார் அலுவலகத்தை பயன்படுத்தி தலிபான்கள் நிதி சேகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கும் அபாயம் இருப்பதா கவும் ஆப்கான் ஜனாதிபதி அலுவலகம் கவலை தெரிவித்தது.
அமெரிக்கா கடந்த காலங்களில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்ட போதும் இதுவரை இரு தரப்புக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அதேபோன்று தலிபான்கள் ஜனாதிபதி கர்சாய் மற்றும் அவரது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் புறக்கணித்து வந்தனர். ஆப்கான் அரசு வொஷிங்டனின் நாய்க்குட்டி என்றும் தலிபான்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
– தினகரன்
Leave a comment