நாளை இலங்கை-இந்தியா மோதும் அரை இறுதிப்போட்டி: காலநிலை போட்டியைப் பாதித்தால்…..

India-Vs-Sri-lanka[1]-MJ

லண்டன்: தற்பொழுது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்றுவரும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

இன்று, சற்று முன்னர் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் 176 எனும் ஓட்ட இலக்கை இலகுவாக 7 விக்கட்டுக்களால் இங்கிலாந்து வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது.

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருந்தது. லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றி பெற்றது.

நாளை கார்டிப்-வேல்ஸ நகரில் இடம்பெறும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்த்து இந்தியா விளையாட இருக்கின்றது. இன்றைய போட்டி காலநிலை பாதிப்பில்லாமல் முழுமையாக இடம்பெற்று நிறைவடைந்திருக்கின்றது.

India-Vs-Sri-lanka[1]

எனினும் நாளை இடம்பெறும் போட்டியில் காலநிலை பாதிப்புக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்செய்தியை எழுதும் போது அங்கு இன்று பிற்பகலில் மழை பெய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

நாளை இடம்பெறும் இலங்கை-இந்தியா அணிகளின் அரை இறுதிப்போட்டியில் காலை முதல் மாலைவரை மழை பெய்யக்கூடும் என்பதாகவே அங்குள்ள வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆகக் குறைந்தது 30 ஓவர்கள் கொண்ட போட்டிகளையாவது நடாத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  அரை இறுதிப்போட்டிகளின் ஐ.சி.சி விதிகளின்படி:

போட்டி இடம்பெற்று, போட்டி சமநிலையில் (Tie) முடிவுற்றால், இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு சுப்பர் ஓவர் வழங்கப்படும்.

இந்த சுப்பர் ஓவரில் மேலும் போட்டி சம நிலையில் (Tie) முடிந்தால் அல்லது கால நிலை பாதிப்பால் போட்டி முடிவின்றி (No Results) நிறைவுற்றால், குறித்த பிரிவில் வெற்றிபெற்ற அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகும்.

இந்தவகையில் நாளை இடம்பெறும் போட்டியில் மழை குறுக்கிட்டு, போட்டி நடக்காமலேயே இருப்பினும் அல்லது சுப்பர் ஓவர் சமநிலையில் முடிந்தாலும் ‘பி’ பிரிவில் வெற்றி பெற்ற இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும்.
இலங்கை ‘ஏ’ பிரிவில் இரண்டாம் இடத்தில் இருப்பதால் இலங்கை தொடரிலிருந்து வெளியேற நேரிடும்.

எனவே நாளை மழையுடன் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் ஓட்டங்களை வேகமாக குவிப்பதற்கு முயற்சிக்கும். மழையால் ஓவர்கள் குறைக்கப்படின், டக்வேர்த் லுவிஸ் முறைக்கு போட்டியின் தீர்ப்பு செல்லும்.

குறைவான இலங்கை இரசிகர்களைக் கொண்ட கார்டிப் மைதானத்தில் நாளைய போட்டியில் இலங்கைக்கே அதிகமான அழுத்தங்கள் காத்திருக்கின்றன.

Published by

Leave a comment